திருச்செந்துாரில் பக்தர்களிடம் வசூல் அர்ச்சகர்கள் இருவர் சஸ்பெண்ட்
துாத்துக்குடி:திருச்செந்துார் முருகன் கோவிலில், பக்தர்களிடம் பணம் வசூலித்த இரு அர்ச்சகர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடி அமாவாசை நாளில் அர்ச்சகர் ஒருவர் பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்று, விதி முறையை மீறி கோவிலுக்குள் அழைத்துச் சென்றதாக புகார் எழுந்தது. இதேபோல, 'பத்து நிமிடத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்' எனக்கூறி, பணம் வசூலித்து சிலரை கோவிலுக்குள் அழைத்து சென்றதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கோவில் நிர்வாகம், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இரு அர்ச்சகர்களை, சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் உத்தர விட்டது. கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: விதிமுறை மீறி கோவிலுக்குள் அழைத்து சென்றது தொடர்பான புகாரில், கோவில் தக்கார் அருள் முருகன், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆடி அமாவாசை நாளில், திரிசுதந்திரர் பாபு நாராயணன் என்பவர், பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்று, ஐந்து பேரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றது தெரிந்தது. இதேபோல, திரிசுதந்திரர் பாலசுப்பிரமணியன் என்பவர் மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இவர்கள் இருவரும் கோவிலுக்குள் பூஜை கைங்கரியங்கள் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.