உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தொல்லியல் களத்தில் கல்குவாரிக்கு அனுமதி சிவகளை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தொல்லியல் களத்தில் கல்குவாரிக்கு அனுமதி சிவகளை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட சிவகளை பஞ்சாயத்து, நயினார்புரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் புதிதாக கல்குவாரி அமைக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தொல்லியல் களமாக கருதப்படும் சிவகளை, பரம்பு மலை பகுதியில் கல்குவாரி அமைத்தால் பாதிப்பு ஏற்படும் என, தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.மேலும், மானாவாரி குளமான நயினார்குளத்தின் ஒரு பகுதியிலும், விவசாய நிலப்பகுதிக்குள்ளும் கல்குவாரி அமைக்கும் இடம் வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி உள்ளனர். விவசாய நிலத்திற்குள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:தாமிரபரணி நதி ஓடிய பழைய பகுதியின் கரைப்பகுதியில் ஆதிச்சநல்லுார் கிராமமும், சிவகளை, பரம்பு மலை பகுதியும் சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஆதிச்சநல்லுாரில், 13 இடங்களில் இதுவரை தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டு, முதுமக்கள் தாழி, தங்க நெற்றி பட்டயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.தொடர்ந்து, சிவகளை, பரம்பு மலை பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அப்படி இருக்கும் போது, தொல்லியல் தளமாக கருதப்படும் சிவகளையில் தனியார் இடத்தில் கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்தது விதிமுறைக்கு மாறானதாகும்.தொல்லியல் தளத்தில் கனிம வளங்களை எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என, நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் சிலர் தொல்லியல் களத்திற்கும், கல்குவாரி அமைந்துள்ள இடத்திற்கும் பல கி.மீ., தொலைவு இருப்பதாக தவறான தகவல்களை தெரிவித்து குவாரிக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.தொல்லியல் களம் பகுதிக்குள் கல்குவாரி அமைந்தால், புராதான சின்னங்கள் சிதைவடையும். மேலும், அப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது. வல்லநாடு மலையில் இருந்து வெளிமான்கள் சிவகளை பகுதிக்கு வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். கல்குவாரிக்கான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனுமதி நிறுத்திவைப்பு: கலெக்டர்

துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கூறியதாவது:தனியார் நிலத்தில் கல்குவாரி அமைக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தொல்லியல் களத்திற்குள் கல்குவாரி அமைவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அனுமதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான நிலமாக இருந்தபோதிலும், அந்த நிலத்தின் ஆவணங்களை முழுமையாக சரிபார்ப்போம். தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை