இடியும் நிலையில் மீன்வலைக்கூடம் கட்டிய நான்கு ஆண்டுகளில் அவலம்
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில், 200 விசைப்படகுகளிலும், 150 நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, 2020ம் ஆண்டு, 12.10 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன்வலை பின்னும் கூடம் கட்டப்பட்டது.கடல் அரிப்பு மற்றும் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக, மீன்வலை பின்னும் கூடம் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:கடலில் இருந்து 200 அடி தொலைவில் தான் மீன்வலை பின்னும் கூடம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு அந்த கட்டடத்தில் தண்ணீர் சூழ்ந்தது. கட்டடத்தின் துாண்கள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் இதுவரை பார்வையிடவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.அந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, மாற்று இடத்தில் மீன்வலை பின்னும் கூடம் புதிதாக கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.