சாராய வியாபாரி விடுவிப்பு போலீஸ்காரர் துாக்கியடிப்பு
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, கள்ளச்சாராய வியாபாரியை விடுவித்த போலீஸ்காரர், ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை அடுத்த உமராபாத் காவல் நிலைய போலீஸ்காரர் தமிழரசன், ஊர்க்காவல் படையை சேர்ந்த சக்திவேல், இரு நாட்களுக்கு முன், வெங்கடாபுரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஒருவரிடம் சோதனை செய்ததில், அவர் கள்ளச்சாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாதகடப்பா பகுதியிலிருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது. ஆனால், அவரை கைது செய்யாமல், தமிழரசன் விடுவித்து விட்டார். இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., சியாமளா தேவிக்கு புகார் சென்றது. விசாரணையில், கள்ளச்சாரயம் விற்றவரை விடுவித்தது உண்மை என தெரிந்ததால், தமிழரசனை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.