திருப்பூர்: கடலோர பகுதிகளில் இருந்து மீன் வரத்து குறைந்துள்ளதால், வெளிமார்க்கெட்களில் கடல் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மீன் பிரியர்கள் பலரும் ஆற்று மீன் நுகர்வில் ஆர்வம் காட்டுவதால், நெய்தல் அங்காடிகளில் விற்பனை அதிகரிக்க துவங்கிஉள்ளது.
தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து கடல் மீன், திருப்பூர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அயிலை, வஞ்சிரம், முரல் உள்ளிட்ட கடல் மீன் விற்பனையை பிரதானமாக கொண்டு செயல்படும் மார்க்கெட்டுகள், திருப்பூரில் அதிகளவு உள்ளன. கட்லா, ரோகு, மிர்கால் என ஆற்று மீன்கள் பிரதானமாக கொண்டு தமிழக மீன்வளத்துறை மூலம் நான்கு நெய்தல் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. அதிக சதைப்பற்றுடன், முட்கள் குறைவாக காணப்படுவதால், திருப்பூரில் பெரும்பாலானோர் வெளிமார்க்கெட்களில் கடல் மீன் வாங்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெளிமார்க்கெட்களை ஒப்பிடும்போது, நெய்தல் அங்காடியில் விற்பனை மிக குறைவாகவே இருக்கும். தென்மாவட்டங்களில் பரவலான மழை, மீன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தற்போது கடலில் மீன் பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது; வெளிமார்க்கெட்டுக்கு கடல் மீன் வரத்து தடைபட்டுள்ளது. பெரும்பாலான மார்க்கெட்களில் கடல் மீன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நெய்தல் அங்காடிகளில் மீன் விற்பனை அமோகமாக நடக்கிறது.
அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூரில் பெரும்பாலானோர் கடல் மீன்களையே விரும்பி உண்கின்றனர்; ஆற்று மீனை பிரதானமாக கொண்டு செயல்படுவதால், நெய்தல் அங்காடிக்கு நுகர்வோர் வருவது குறைவு. விசேஷங்கள், விழாக்களின் வருகையால் ஆவணி மாதம் பிறந்தது முதல் மீன் விற்பனை கடுமையாக சரிந்தது. திருப்பூரில் உள்ள நான்கு அங்காடிகளிலும் சேர்த்து நாளொன்றுக்கு 600 முதல் 700 கிலோ வரை நடந்த விற்பனை, 60 சதவீதம் பாதித்தது; இருப்பு விகிதம் அதிகரித்தது. சதுர்த்தி விழா முடிந்ததையடுத்து, தற்போது மீன் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கடல் மீன் விற்பனை செய்யும் வெளிமார்க்கெட்களுக்கு மீன் வரத்து இல்லாததால், நெய்தல் அங்காடியில் ஆற்று மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது 900 கிலோ ஆற்று மீன் விற்பனையாகிறது.