உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 13ம் நுாற்றாண்டு கல்வெட்டு உடுமலையில் கண்டுபிடிப்பு

13ம் நுாற்றாண்டு கல்வெட்டு உடுமலையில் கண்டுபிடிப்பு

உடுமலை:உடுமலை அருகே, வீரசோழீஸ்வரர் கோவில் பகுதியில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்து, கல்லுாரி மாணவியர் ஆவணப்படுத்தினர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொழுமம் கிராமத்தில், பழமை வாய்ந்த வீர சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பகுதியில், பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி தமிழ்த்துறை மாணவியர், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலின்படி கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, கோவில் அருகில் தென்னந்தோப்பில் துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.அக்குழுவினர் கூறியதாவது:கொழுமம் அமராவதி ஆற்றங்கரை அருகே, மண்ணுக்கடியில் புதைந்திருந்த இக்கல்வெட்டு மீட்கப்பட்டு, தென்னந்தோப்பில் வைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு துண்டு கல்வெட்டாகும். கோவில் அதிஸ்டானத்தின் குமுதப்பகுதியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுத்துகள் உள்ள குமுதத்தின் இருமுனைப் பகுதிகள் சிதைந்து விட்டன.இக்கல்வெட்டு, 13ம் நுாற்றாண்டில், கொங்கு சோழ மன்னர் மூன்றாம் விக்கிரம சோழரின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.சிவன் கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடையை, அக்கோவி லின் அர்ச்சகரான ஆதி சைவ சக்கரவர்த்தி கோத்திரத்து உய்யவந்தான் என்பவர் பெற்றுக்கொண்டுள்ளார்.சிவதீட்சை பெற்ற ஆதிசைவ சிவாச்சாரியார்கள் எனும் அர்ச்சகர்கள், கொங்குப்பகுதி கோவில்களில் இருந்ததை, பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.இவ்வாறு அக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி