திருப்பூர்:மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், குறு, நிறுவனங்கள், தங்களது கொடுபட வேண்டிய கட்டணங்களை, 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்; இல்லாதபட்சத்தில், கொடுபடா செலவினம், லாபமாக கருதி வருமான வரிவிதிக்கப்படும் என்று வரித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, வடமாநில வர்த்தகர்கள், இத்தகைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென முறையிட்டனர். குறு, சிறு நிறுவனங்கள், உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றனர்; நடுத்தர நிறுவனங்கள், 'பேமென்ட்' அவகாசம், 45 நாட்கள் என்பதை, 60 நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றனர்.இப்படியாக, பல்வேறு கோரிக்கைகள் எழுந்ததால், வரிதிருத்தம் தொடர்பான இறுதி முடிவு, அடுத்தமாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் ஏற்படுத்தப்படும். இந்நிலையில், 45 நாள் 'பேமென்ட்' என்ற வரித்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; குறு , சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.வர்த்தகர்களிடம், 45 நாட்கள் என்ற கட்டுப்பாடு விதித்தால், வேறு பெரிய நிறுவனங்களுக்கு மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்தவரி திருத்தத்தில், 60 நாட்கள் என்று நீட்டிக்க வேண்டும்; உடனடியாக அமல்படுத்தாமல், முதல் ஆண்டில் சோதனைமுறையில் அமலாக்க வேண்டும். இத்திட்டத்தில், நடுத்தர நிறுவனங்களையும் இணைக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது.நாடு முழுவதும் உள்ள, குறு, சிறு தொழில்துறையினரின் கருத்துக்களை கேட்டறிந்து, வருமானவரிச்சட்ட திருத்தம் தொடர்பாக, அடுத்தமாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் தேவையான மாற்றங்களை செய்து அறிவிக்க வேண்டுமென, மீண்டும் தொழில்துறையினர் கோரிக்கை வைத் துள்ளனர்.