கடும் பாறை சிலையாகுமே ... குரு போதனை உளியாகுமே !
செப்., 5
ஆசிரியர் தினம்ஆசிரியர் பணி, பிற பணிகளைப் போன்று, வாழ்வாதாரத்துக்கான பணி மட்டுமன்று; தனது வாழ்வையே மாணவர்களுக்காக ஆதாரமாக்கும் நற்பணி. ஒரு சிறந்த ஆசிரியர், வகுப்பறைக்குள் மட்டுமின்றி, எங்கும், எப்போதும் ஆசிரியராகவே திகழ்கிறார். அவரது சேவைக்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு மாணவரும், ஆசிரியரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும், அவரது தன்னலமற்ற முயற்சிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறையேனும் நன்றி சொல்வதற்கான வாய்ப்பையும் செப்., 5 - ஆசிரியர் தினம் உருவாக்குகிறது. கற்பித்தல் ஒரு தொழில் அல்ல; அது வாழ்க்கை முறை. மாணவர்களுக்கான அடித்தளத்தையும், சமூகத்திற்கான கட்டமைப்பையும் மேற்கொள்வதால், தேசத்தின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர் தினத்தையொட்டி, சமூகக் கருத்துகளை இங்கே பகிர்கின்றனர்.------------------..................ஒழுக்கம் வளர்க்கும் கல்வி சாத்தியமேமுருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழக முதுநிலை ஆசிரியர் பட்டதாரி கழகம்: மாணவர் அறிஞராகும் முன்பு, ஒழுக்கத்தில் சிறந்தவராக மாற வேண்டும்; அதற்கு ஆசிரியர் பங்களிப்பு அவசியம். அதை விட பெற்றோரின் பங்களிப்பும் மிக அவசியம்; மகன்/மகள் நலனில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்; அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்; அணுகுமுறை மிக முக்கியம்.எத்தனை மணிக்கு பள்ளிக்கு செல்கிறார்; மாலை, இரவு எப்போது வீடு திரும்புகின்றனர்; நண்பர், தோழியர் யார் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவர்களிடம் நேரம் செலவிட வேண்டும்; பேச வேண்டும். பள்ளிகளில் பல ஆசிரியர்கள், நல்ல மாணவர்களை உருவாக்க அரும்பாடுபடுகின்றனர். பெற்றோரும் அதற்கு ஒத்துழைத்தால், சிறந்த கல்வியைக் கிடைக்கச் செய்ய முடியும். சிலர் ஒத்துழைக்கின்றனர்; பலர் அவ்வாறு செய்வதில்லை. ஆசிரியருக்கு இருக்கும் பொறுப்புகள், ஒவ்வொரு மாணவ, மாணவியரின் வெற்றிக்காக பெற்றோரிடமும் வந்து விட்டால், ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியும் சாத்தியமே.----------------விளையாட்டு ஆர்வம் விதைப்பது எப்படி?சசிக்குமார்( உடற்கல்வி இயக்குனர்), மாவட்ட இணைச்செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் சங்கம்: மதிப்பெண் கல்வி முறையால், விளையாட்டே மறந்து வருகிறது. மன, உடல் நலன் காக்க மாணவர்களுக்கு விளையாட்டு அறிவும் அவசியம். தற்போது, உடற்கல்விக்கென வாரத்தில் இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்படுகின்றன. மாணவர் அதிக எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் இது கிடைத்தாலும், திறமையான விளையாட்டு வீரரை உருவாக்க இது போதுமானதல்ல. உடற்கல்விக்கென தனிப் பாடத்திட்டம் வேண்டும். செய்முறை மட்டும் போதாது.ஒவ்வொரு விளையாட்டின் விதிமுறைகளை முழுமையாக 'தியரி'யாக தெரிந்து கொள்ளும் போது தான், விளையாட்டில் ஆர்வம் வரும். புதிய வீரர்கள் உருவாகுவர். விளையாட்டுக்கென தேர்வுகளைப் பெயரளவுக்கு நடத்தாமல், அவற்றுக்கும் முக்கியத்துவம் தந்தால், கற்றுக்கொள்ளும் ஆர்வமும், மைதானத்தில் இறங்கி விளையாடும் ஆர்வமும் மாணவ, மாணவியரிடம் பெருகும்.---------------தொழிற்கல்வி பாடமன்று ஒரு வாழ்க்கை முறைஅருள்ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழக மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் நலச் சங்கம்: கற்றல், கற்பித்தல், செய்முறையோடு கற்பதால், படிப்புக்கு பின் வேலையை, சொல்லித்தர வேண்டியதில்லை. படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலையும் கற்றுக்கொடுக்கிறோம் என்பதில் ஆத்மதிருப்தி. அடிப்படைக் கல்விக்கும், தொழிற்கல்விக்கும் வித்தியாசம் என்ன என்பதை, ஒரு 'ஸ்கேலை' உதாரணமாக கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஸ்கேல் கோடு போட, படம் வரைய மட்டும் உதவும் என்பது அடிப்படை கல்வி. அதைக் கொண்டு தான், மெட்ரிக், கன அடி போன்ற அளவுகோல்களை உலகம் முழுதும் பின்பற்றுகிறது என்பது தான் தொழிற்கல்வி.மீட்டர், கிலோமீட்டர், மைல் அளவுகளை துல்லியமாக கணக்கிடுவது கற்றுக்கொள்ள உதவுவதும் ஸ்கேல்தான். தொழிற்கல்விக்கு மூளை போதுமானது. படிக்கும் மாணவர் இடைநின்றால் கூட பிளஸ் 2 வரை கற்ற கல்வி, வாழ்வுக்கு, தொழிலுக்கும் கை கொடுக்கும். அத்தகைய கல்வியை கற்றுத்தருவதில், மகிழ்ச்சி.தொழிற்கல்வி கற்கும் மாணவர் வீடு, பள்ளிகளில் கூட தங்களால் இயன்ற வேலையை தாங்களே முன்வந்து செய்கின்றனர். வேலைவாய்ப்பு தரும் நிறுவனத்தில் எப்படி பழக வேண்டும்; சமூக பொறுப்பு என்ன, திறன் என்ன என்பதை படிக்கும் போதே கற்றுக்கொள்கின்றனர். தொழிற்கல்வி கற்பித்தல் தொழில் அல்ல; வாழ்க்கை முறை. அதை மாணவ, மாணவியருக்கு கற்றுத்தருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி.----------------------------செயல் சிறக்க தேவை சுதந்திரச் செயல்பாடுசீரங்கராயன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம்: ஆசிரியர் - மாணவர் இடையே இருந்த நெருக்கம் குறைந்து விட்டது. தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. இடைவெளி அதிகமானதால்தான் பல பிரச்னைகள் முளைக்கின்றன. உதாரணமாக, முன்பெல்லாம் சுற்றுலா அழைத்து செல்லும்போது, ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பத்து வயது, ஆறாம் வகுப்பு மாணவிக்கு, 12 வயது இருக்கும்போது ஆசிரியர்களுடன், நம்பி அனுப்பி வைப்பர். ஆசிரியர் பக்கத்தில் அமர்ந்துகொள் என தாய்மார்களே தைரியம் சொல்லி அனுப்புவர். இன்று அப்படியொரு நிலை இல்லை. தப்பாக நினைத்து விடுவார்களோ என்ற பயம் ஆசிரியர்களுக்கு வந்துள்ளது; ஆசிரியர் சிலரது தவறான செயல்பாடுகளால், பெற்றோருக்கு பயம் வருகிறது.அன்று மாணவர் பெயர் தெரியவில்லை என்றாலும், பெற்றோர் பெயர் தெரியும்; வழியில் பார்த்தால் பேசுவார்கள்; விசாரிப்பார்கள். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்கு முதல் ஆளாக வருவர். ஒரு மாணவரை அடித்து விட்டால், உடனே பெற்றோர் வந்து, 'குறும்பு செய்தால், இன்னமும் இரண்டு சேர்த்து வைக்க வேண்டியது தானே' என ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பர். இப்போது நிலை அப்படியில்லை. 'வாத்தியார் எதுக்கு உன்னை அடிக்கிறார்' என தந்தையே மாணவரை உசுப்பேற்றுகின்றனர்.பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்; உரிமை இருப்பதற்காக அடிக்கவில்லை - ஒழுக்கமாக மாற்றத்தான் மிரட்டுகிறார்கள் என்பதை.அன்று, தேர்ச்சியடையாமல் செய்யலாம் என்ற உரிமை ஆசிரியர்களிடம் இருந்தது; ஆனால், அதை வைத்து ஒரு மாணவரையும் வஞ்சகம் செய்து, தோல்வியடையச் செய்து, அதே வகுப்பிலேயே அமர வைக்க வேண்டும் என எந்த ஆசிரியரும் முடிவெடுத்து இருக்க மாட்டார். எப்படியாவது மேலே உயர்த்த வேண்டும் என நினைத்திருப்போம்.'ஆல்பாஸ்' வந்ததில் இருந்து, எல்லாம் மாறிவிட்டது. பாடத்திட்டத்தில் மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கேற்ப ஆசிரியருக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்.-----------------------------------லஞ்சம், ஊழல் தீமைகள் உணர்ந்தால் நன்மைகள்சுந்தரமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கம்: மாணவர்கள் லஞ்சம், ஊழலின் தீமைகளை உணர்ந்துகொள்ள, அரசியலைத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய அரசியலையும் கற்றுத் தருபவர்களாக ஆசிரியர் இருக்க வேண்டும். பண்பாடு, கலாசாரத்தைச் சீரழிக்காமல் இருந்தால் மாணவர்கள் முன்னேறுவர். மாணவருக்கு பெரிய வழிகாட்டி, ரோல்மாடலாக ஆசிரியர் இருக்க வேண்டும். வாழ்வியல் முறை ஒழுக்கங்கள் கற்றுத்தர வேண்டும். நல்ல பாதை இது தான் என அதில் பயணிக்க வழிகாட்ட வேண்டும்.ஒன்பதாம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' வைத்து விட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை கல்வியில் தேறாத மாணவரை, பத்தாம் வகுப்புக்கு கொண்டு வந்து திடீர் என்று வெற்றிபெறச் செய்ய வைக்க வேண்டும் என்றால், நல்ல மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்றால் எப்படி ஆசிரியரால் முடியும்? ஆசிரியர்கள் ஊதியத்துக்காகத்தான் வேலை பார்க்கிறார்கள்; நிறைய ஊதியம் வாங்குகின்றனர் என பெற்றோர் நினைக்கின்றனர். அனைவரும் தேர்ச்சி, ஆல்பாஸ் என்பதால்தான் இப்பிரச்னை மேலோங்குகிறது.கைகளை கட்டிப்போட்டு விட்டு பாடம் நடத்தச் சொல்கிறது, கல்விமுறை.பள்ளிக்கு சென்றால் போதும்; படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஏனோ தானோ நிலை மாற வேண்டும்.--------------------------------------வளைகளுக்கு வாங்க... வலைதளம் எதற்கு?முருகன், மாவட்ட தலைவர், திருப்பூர் பட்டய சான்றிதழ், உடற்கல்வி ஆசிரியர் சங்கம்: பள்ளி நேரத்தில் தான் விளையாட வேண்டும்; உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற மனநிலையை விட்டு, ஆசிரியர், மாணவர் வெளியே வர வேண்டும். காலை, மாலை விளையாட்டுக்கென, பயிற்சிக்கென நேரம் ஒதுக்கினால் மட்டுமே விளையாட்டில் சாதிக்க முடியும். விளையாட்டில் ஒரு மாணவி அல்லது மாணவர் சிறந்தவராக வர வேண்டும் என்றால், அதற்கு முதல் உந்துதலாக பெற்றோர் இருக்க வேண்டும்.அவர்கள் சுதந்திரம் கொடுத்தால், இவர்களால் எல்லைக்கோட்டை தாண்டி வெற்றி பெற முடியும்.மாணவர்கள் வலைதளப் பக்கங்களை விட, விளையாட்டு வளைகளுக்குள் வர வேண்டும் என்றால், மொபைல் போன் மீதான ஆர்வத்தை குறைக்க வேண்டும். புதிய மொபைல் போன் வாங்கி தருவதை விட, புதிதாக விளையாட தரமான பந்து, உபகரணங்கள் வாங்கித்தரலாம்.தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று பொழுது போக்குவதைவிட, மைதானங்களுக்கு அழைத்து சென்று, வெற்றி பெற்றவர் மகிழ்ச்சியை காட்டலாம்; புதிய உத்வேகம் பிறக்கும். ஒருவர் விரும்பிய விளையாட்டை தேர்வு செய்து, துவக்க, நடுநிலைப்பள்ளி அளவிலே கற்றுக்கொண்டால், சிறந்த பயிற்சியாளராக, விளையாட்டு ஆசிரியர் அமைந்து விட்டால் பின் வெற்றி நிச்சயம் தான்.-----------தோல்வி ஒரு பொருட்டல்ல... வெற்றி ஒரு முடிவல்லசெல்வக்குமார், மாவட்ட தலைமையிடச் செயலாளர், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட தலைமை இட செயலாளர்: இன்றைய மாணவர்களுக்கு பாடங்களைத் தாண்டிய நேர்மறைச் சிந்தனையைக் கற்றுத்தருபவர்களாக ஆசிரியர்கள் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு, ஊக்கம் தருபவராக மாற வேண்டும். என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை சொல்லித் தர வேண்டும்.'பாஸ்' செய்தால், மட்டுமே, 'பாஸ்' ஆகிறவர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்றாலும் தளர்ந்து விடக்கூடாது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு, வாய்ப்புகள் உள்ளன.தோல்வி ஒரு பொருட்டல்ல. வெற்றி ஒரு முடிவல்ல என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் திறமை இருக்கும். ஏன் படிக்காமல் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கு பின்பும் நிறைய குடும்ப பிரச்னைகள், வறுமை இருக்கும்; அதை எடுத்துக்கூறி, தீர்வு சொல்லி விட்டால், அவர்களது வாழ்க்கை ஒளிரும். ஒரு பட்டம் பெற்று, விட்டால், போட்டி தேர்வெழுத முடியும்; அதற்கு ஊக்கம் தருபவராக ஒவ்வொரு ஆசிரியரும் மாற வேண்டும்.
தோல்வி ஒரு பொருட்டல்ல... வெற்றி ஒரு முடிவல்ல
செல்வக்குமார், மாவட்ட தலைமையிடச் செயலாளர், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட தலைமை இட செயலாளர்: இன்றைய மாணவர்களுக்கு பாடங்களைத் தாண்டிய நேர்மறைச் சிந்தனையைக் கற்றுத்தருபவர்களாக ஆசிரியர்கள் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு, ஊக்கம் தருபவராக மாற வேண்டும். என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை சொல்லித் தர வேண்டும்.'பாஸ்' செய்தால், மட்டுமே, 'பாஸ்' ஆகிறவர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்றாலும் தளர்ந்து விடக்கூடாது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு, வாய்ப்புகள் உள்ளன.தோல்வி ஒரு பொருட்டல்ல. வெற்றி ஒரு முடிவல்ல என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் திறமை இருக்கும். ஏன் படிக்காமல் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கு பின்பும் நிறைய குடும்ப பிரச்னைகள், வறுமை இருக்கும்; அதை எடுத்துக்கூறி, தீர்வு சொல்லி விட்டால், அவர்களது வாழ்க்கை ஒளிரும். ஒரு பட்டம் பெற்று, விட்டால், போட்டி தேர்வெழுத முடியும்; அதற்கு ஊக்கம் தருபவராக ஒவ்வொரு ஆசிரியரும் மாற வேண்டும்.