பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அமையுங்க! மேலாண்மைக் குழுவினர் வேண்டுகோள்
உடுமலை; உடுமலை கோட்டத்தில் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையால் இடநெரிசல் ஏற்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், அரசு பள்ளிகளுக்கான விழிப்புணர்வு, அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை, மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் முறைகள், ஆங்கிலவழிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தற்போது அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.குறிப்பாக, கடந்த சில கல்வியாண்டுகளில், சரிந்து வந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில், தற்போது மீண்டும் பொதுப்பொலிவுடன் காணப்படுகிறது.ஆனால், தற்போது அரசு பள்ளிகளுக்கு வேறுவிதமான பிரச்னை ஏற்படுகிறது. மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்கான வகுப்பறை இல்லாமல் நெரிசலாக அமர வைக்கும் நிலை ஏற்படுகிறது.சில பள்ளிகளில் தலைமையாசிரியர் அறைகளும், தற்போது வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் வகுப்பு இல்லாத நேரங்களில், திண்ணையில்தான் அமருகின்றனர்.பள்ளி மேலாண்மை குழுவினர் கூறியதாவது:பள்ளிகளில் முன்பு, துவக்கநிலை வகுப்பு மாணவர்களை ஒன்றாக அமர வைத்து பாடம் நடத்தினர். இப்போது தமிழ்வழி, ஆங்கிலவழி என இரண்டு பிரிவுகளாகவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தால், தனித்தனி வகுப்புகளாகவும் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது.இதனால் ஒவ்வொரு வகுப்புக்கும் தனி அறை தேவையாக உள்ளது. இதுதவிர, நுாலகமாக செயல்பட்ட அறைகளும் இப்போது மாணவர்கள் அமர்வதற்காக மாற்றப்பட்டுள்ளன.இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள், அந்த வகுப்பில் வந்து நுாலகத்தை பயன்படுத்த முடிவதில்லை. மேலும், ஸ்மார்ட் வகுப்புக்கென ஒரு அறையும் ஒதுக்கப்படுகிறது.கூடுதல் வகுப்பறை தேவைப்படும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, புதிய கல்வியாண்டு துவங்கும் முன்பு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.