சுரைக்காய் சாகுபடியில் மகசூல் பெற அட்வைஸ்
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், கிணற்று பாசனத்தில், கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.இதில், கொடி வகை காய்கறிகளை, குறிப்பிட்ட சீசனை தேர்வு செய்து, சாகுபடி செய்கின்றனர். அதில், சுரைக்காய் சாகுபடியும் ஒன்றாகும். தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: சுரைக்காய் கொடிக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களைகளை அகற்றி, ஒரு ெஹக்டேருக்கு, 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.கொடிகள் நிலத்தில் படருவதால், வெயில் மற்றும் மழைக்காலத்தில், பாதிப்பை தவிர்க்க, சின்ன குச்சிகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம்.இதன் வாயிலாக, அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி, 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.இந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு, 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம். இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.