உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதர் மண்டியுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் ஊராட்சி வசம் பராமரிப்புப்பணி வழங்கப்படுமா?

புதர் மண்டியுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் ஊராட்சி வசம் பராமரிப்புப்பணி வழங்கப்படுமா?

திருப்பூர்,: அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகள் புதர்மண்ட துவங்கியிருப்பதால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது; அவற்றை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த ஊராட்சிகள் வசம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,914 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குளம், குட்டைகளுக்கு வரும் நீரை, நீரேற்று நிலையங்களில் இருந்தபடியே கண்காணிக்க, 'அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' (ஓ.எம்.எஸ்.,) என்ற இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவை சோலார் தகடுகளின் உதவியுடன் சூரிய ஒளியில் இயங்குகின்றன. இத்தகைய 'ைஹடெக்' தொழில்நுட்ப உபகரணங்கள், அதோடு இணைத்து பொருத்தப்பட்டுள்ள குழாய், வால்வு மற்றும் பிற உபகரணங்களை சிலர் உடைத்து சேதப்படுத்துகின்றனர்; அவற்றை திருடியும் செல்கின்றனர். எனவே, அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டி காணப்படுகிறது. செடி, கொடிகள் வளர்ந்து, பொருத்தப்பட்டுள்ள ஓம்.எம்.எஸ்., கருவிகளையே சூழும் நிலை கூட தென்படுகிறது.

ஊராட்சிகளுக்கு அதிகாரம்

இது குறித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவிகுமார் கூறியதாவது:கிராம ஊராட்சிகளுக்கு 'நீர் நிலை பாதுகாப்பு' என்ற பொறுப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளை பராமரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பொறுப்பையும் வழங்க வேண்டும்.ஓ.எம்.எஸ்., உபகரணங்களை சுற்றி தடுப்பு வேலி அமைப்பது, அவ்வப்போது குளம், குட்டைகளை சூழும் செடி, கொடிகளை அப்புறப்படுத்துவது, துார்வாருவது போன்ற பணி மேற்கொள்ள, நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும், அல்லது ஊராட்சியை நிதியை பயன்படுத்த, அந்தந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கலாம். அப்போது தான் பெரும் தொகை செலவழித்து நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை