உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னையில் பரவும் நோய்த்தாக்குதல் ஆலாமரத்துார் விவசாயிகள் அதிர்ச்சி

தென்னையில் பரவும் நோய்த்தாக்குதல் ஆலாமரத்துார் விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை;தென்னை மரங்களில், நோய்த்தாக்குதல் வேகமாக பரவி, மரங்கள் காய்ப்புத்திறன் இழந்து வருவதால், ஆலாமரத்துார் சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இப்பகுதியில் மட்டும், 15,500 ெஹக்டேர் பரப்பில், பல லட்சம் தென்னை மரங்கள் நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய, வெள்ளை ஈ தாக்குதல் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மூங்கில்தொழுவு சுற்றுப்பகுதிகளில், வாடல் நோய் தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டன.தற்போது, ஆலாமரத்துார், வல்லக்குண்டாபுரம் சுற்றுப்பகுதிகளில், தென்னை மரங்களில் புது விதமான நோய்த்தாக்குதல் பரவி வருகிறது.மரங்களின் தண்டு பகுதியில், ஒரு வித சாறு வடிகிறது; இந்த அறிகுறி தென்படும் முன்பே, மரங்களின் ஓலைகள் சரிந்து, காய்களும் கொட்டி விடுகிறது. சில மாதங்களில், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ப்புத்திறன் இழந்து விடுகிறது.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தென்னை சாகுபடியில் பல்வேறு நோய்த்தாக்குதல்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரியவில்லை.ஏற்கனவே, கொப்பரை, தேங்காய் விலை வீழ்ச்சியால், நஷ்டத்துக்குள்ளாகி வருகிறோம். தென்னை மரங்கள் காய்ப்புத்திறன் இழந்தால், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகளாகிறது.இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் நேரடி ஆய்வு செய்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும். இல்லாவிட்டால் வேகமாக பரவி வரும் நோய்த்தாக்குதலுக்கு பல்லாயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை