| ADDED : ஏப் 19, 2024 10:39 PM
உடுமலை:''ராம நாமத்தையும், சுந்தர காண்டத்தையும் பாராயணம் செய்து அனைவரும் நன்மை பெற வேண்டும்,'' என புலவர் சுபாஷ்சந்திரபோஸ் கூறினார்.உடுமலை காட் அமைப்பின் சார்பில் சுந்தரகாண்டம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.உடுமலை, நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ராம நவமியையொட்டி, காலை, 8:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை அகண்ட நாம சங்கீர்த்தனம் நடந்தது.தொடர்ந்து மாலையில் சுந்தரகாண்டம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. ஓய்வுபெற்ற தலைமையாசிரியரும், புலவருமான சுபாஷ்சந்திரபோஸ் சொற்பொழிவு நிகழ்த்தினார்.அவர் பேசியதாவது:சுந்தர காண்டம் என்ற பெயர் காரணத்துக்கு பல விளக்கங்கள் உள்ளன. ஒரு பொருளை இழந்தவர்கள், மீண்டும் அதை அடைவதை சுந்தர என குறிப்பிடப்படுகிறது.ஒப்பற்ற சிறப்புடைய சீதையை இழந்து, மீண்டும் கைப்பற்றியதால் இது சுந்தரகாண்டம் என்றும், இந்த காண்டத்தில் ஆஞ்சநேயரின் செயல்கள் அழகாய் இருப்பது போன்ற பெயர் காரணங்கள் உள்ளன.ராமாயணம் முழுவதும் கேட்க முடியாதவர்கள், சுந்தரகாண்டம் மட்டுமே கேட்பதால் கூட ராமாயணம் கேட்ட முழுமையான பயன்பெற முடியும்.சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதால், இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். பிரிந்திருக்கும் கணவன், மனைவி ஒன்று சேரலாம்.இனிமையான இல்லற வாழ்வு அமையும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. எதிரிகள் விலகிச்செல்வர். விரோதிகளையும் வெல்லலாம். மனக்கவலை குழப்பம் என அனைத்தும் நீங்கி தெளிவும் மனசாந்தியும் ஏற்படும். நினைத்த நல்ல செயல்கள் அனைத்தும் நிறைவேறும்.ராம நாமத்தையும், சுந்தர காண்டத்தையும் பாராயணம் செய்து அனைவரும் நன்மை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.திரளானவர்கள் பங்கேற்று சொற்பொழிவு கேட்டு மகிழ்ந்தனர்.