விவசாயிகள் நலனுக்கு பா.ஜ., துணை நிற்கும்
பல்லடம், : ''விவசாயிகளுக்கு பிரச்னை என்றால் கட்டாயம் நாங்கள் துணை நிற்போம்'' என்று, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளை, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் நேற்று சந்தித்தார்.விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது:இன்று நிலத்தின் விலை அதிகரித்து விட்டது. விவசாயிகள் எப்போதும் தேசிய நலனுக்கு எதிரானவர்கள் கிடையாது. விவசாய நிலம் கையை விட்டுப் போகும்போது விவசாயி எவ்வளவு துன்பப்படுவார் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அதிகாரிகள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விடமாட்டேன் என, தமிழக முதல்வர் முன்பே கூறியுள்ளார். இவ்வாறு, முதல்வர் தெரிவித்ததை மீறலாமா? விவசாயிகளுக்கு பிரச்னை என்றால் கட்டாயம் நாங்கள் இருப்போம். மத்திய பெட்ரோலிய துறை செயலரிடம் மனு அளித்துள்ளோம். இத்துடன், சட்ட ரீதியாகவும் சந்தித்து வருகிறோம்.மத்திய அரசு எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. உங்கள் போராட்டம் தமிழக அரசின் கவனத்துக்கு தான் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.