பாலம் பணி மந்தம்; போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் : நல்லுார் பகுதியில் சிறுபாலம் கட்டும் பணி காரணமாக, போக்குவரத்துக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.திருப்பூர், காங்கயம் ரோடு, விரிவாக்கம் செய்யும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கயம் ரோட்டில் மழைநீர் வடிகால் அமைத்தல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் சிறுபாலம் அமைத்து, மழை நீரை ரோட்டில் தேங்காமல் அருகேயுள்ள தாழ்வான பகுதி அல்லது ஓடையில் சேரும் வகையிலும் பணிகள் நடக்கின்றன. நல்லுார், காசிபாளையம் ரோடு பிரியும் பகுதியில், ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. பணிக்காக ரோட்டின் ஒரு புறம் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.பாலம் பணிகள் மந்த கதியில் நடப்பதால் போக்குவரத்து அவதி நிலவுகிறது. பணியை துரிதமாக செய்து முடிக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், ' சிறுபாலம் கட்டுமானப் பணிகள் உரிய முறையில் நடந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தற்காலிக மாற்றுப் பாதை குறித்து ஆய்வு செய்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்', என்றனர்.