திருப்பூர்:தமிழ்ப் புத்தாண்டையொட்டி, அவிநாசி பகுதி விவசாயிகள், குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் வந்து, கோவிலில் வழிபட்டனர்.தமிழ்ப்புத்தாண்டையொட்டி, திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுப்பகுதி விவசாயிகள், மாட்டு வண்டியில் குடும்பத்துடன் சென்று, கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனாவுக்கு பிறகு, சில ஆண்டுகளாக மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளவில்லை.தமிழ்ப்புத்தாண்டான நேற்று, அவிநாசி சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், இரட்டை மாட்டு வண்டியில், குடும்ப சகிதமாக பயணித்து, திருமுருகன்பூண்டி வந்து திருமுருகநாத சுவாமி கோவிலில் வழிபட்டனர். விவசாயிகள் கூறியதாவது:நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும்; மக்கள் அனைவரும் பஞ்சமில்லாமல் வாழ வேண்டும் என்று, சித்திரை முதல் நாளில் கோவிலில் வழிபாடு நடத்துகிறோம். பாரம்பரியமாக, குடும்பத்தில் உள்ள அனைவரும் மாட்டு வண்டியில், உற்சாகமாக பேசியபடி சென்று வருவது வழக்கம்.இந்தாண்டும், உற்சாகமான பயணத்தை துவக்கியிருக்கிறோம். உணவு தயாரித்து எடுத்துச்செல்வதால், கோவிலில் பூஜை முடிந்ததும், அனைவரும் கூட்டாக அமர்ந்து சாப்பிட்டு, இளைப்பாறிவிட்டு, மீண்டும் மாட்டு வண்டியிலேயே ஊர் திரும்புவோம்.எதிர்காலத்திலும், ஒவ்வொரு சித்திரைக்கனி நாளில் இதைப் பின்பற்ற வேண்டுமென, இளைஞர்களிடம் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.