‘சாயம், கெமிக்கல், பாலியஸ்டர் நுால் வணிக காஸ் விலை குறைய வேண்டும்’
திருப்பூர், ஜூன் 27– வணிக காஸ் தட்டுப்பாடு நீங்கியுள்ளதால், வணிக காஸ், கெமிக்கல், சாயம், பாலியஸ்டர் நுால் ஆகியவற்றின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்புடன் தொழில்துறையினர் உள்ளனர். திருப்பூர் பின்னலாடைத் துறையில் உற்பத்தியைச் சீராக வைத்திருக்கப் பிரின்டிங், சாய ஆலைகள் மற்றும் தொழிலாளர் கேன்டீன்களுக்கு வணிக காஸ் சிலிண்டர்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காஸ் தட்டுப்பாடு நிலவியதால், நாடு முழுவதும் வணிக காஸ் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், ஒரு கிலோ காஸ் விலை 100 ரூபாயிலிருந்து 185 ரூபாயாக உயர்ந்ததுடன், சிலிண்டர் ஒன்றுக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் இக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, கேஸ் தட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளது. எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்: வணிக காஸ் கட்டுப்பாட்டால் பிரின்டிங் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போர் நிறுத்த அறிவிப்பு நிம்மதியைத் தந்துள்ளது. இனி தட்டுப்பாடின்றி சிலிண்டர்கள் கிடைக்கும் என்றாலும், கடுமையாக உயர்ந்துள்ள காஸ் விலையைக் குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன்: போர் சூழலால் சாயம் மற்றும் கெமிக்கல் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது போர் நிறுத்தம் வந்துள்ளதால், அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி இவற்றின் விலையைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி: எலாஸ்டிக் உற்பத்திக்குத் தேவையான பாலியஸ்டர் நுால் விலை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நுால் விலை இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டுமே எலாஸ்டிக் உற்பத்தித் தொழில் மீள முடியும். ––– மூவரின் படம் வைக்கவும்.