| ADDED : மே 26, 2024 11:12 PM
உடுமலை:டெங்கு போன்ற நோய்பரவலை தடுப்பதற்கு, கொசு விரட்டியான நொச்சி வளர்ப்பை கிராமங்களில் ஊக்குவிக்க, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோடை வெப்ப நிலை மாறி, தற்போது பருவநிலை மாற்றத்தாலும், காய்ச்சல், உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக டெங்கு பாதிப்பு, ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின் போதும் அதிகரிக்கிறது.சுகாதார சீர்கேடு மட்டுமின்றி, போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் டெங்கு பரவலுக்கு காரணமாகிறது.நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.தொற்றுநோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும், கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, அந்தந்த ஒன்றியங்களில், கொசுப்புழு ஒழிப்புக்கென குழு அமைக்கப்பட்டு, மருந்து ஊற்றுவது, வீடுகளை கண்காணிக்கும் பணிகள் நடக்கிறது.கொசுத்தொல்லை இல்லாமல் தடுப்பதற்கு, நொச்சி மூலிகை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இன்னும் பல வீடுகளில், நொச்சி இலைகளை போட்டு புகைபோட்டு கொசு விரட்டியாக பயன்படுத்துகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் நொச்சி செடி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நுாறு சதவீதம், அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல் படுத்தப்படவில்லை.பல கிராமங்களுக்கு இத்தகைய திட்டம் இருப்பதே அறியப்படவில்லை. கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரம் வளர்ப்புக்கான திட்டங்கள் உள்ளன.ஆனால் நொச்சி மூலிகை வளர்ப்புக்கு முக்கியத்துவம் இல்லை. ஊராட்சி பொது இடங்கள், பள்ளி, அங்கன்வாடி கட்டடங்கள் ரோட்டோரங்களில் நொச்சி செடிகளை வளர்ப்பதற்கு மீண்டும் ஊராட்சிகளில் தீவிரப்படுத்த வேண்டியது அவசிய மாகியுள்ளது.