கொளுத்தும் வெயில்; சரியும் நீர்மட்டம் கவலையில் விவசாயிகள்
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயத்துக்கு ஆதாரமாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகள் உள்ளன. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக இருந்ததால், வறட்சியிலிருந்து விளைநிலங்கள் மீண்டன.மழைக்காலத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்தது. முக்கிய நீராதாரங்களான குளங்களுக்கும் நீர்வரத்து கிடைத்தது.இந்தாண்டு வழக்கத்தை விட முன்னதாகவே கோடை வெயில் துவக்கி கொளுத்தி வருகிறது. இதனால், குளங்களில், நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஆண்டியகவுண்டனுார் உள்ளிட்ட பல குளங்களில், நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.திருமூர்த்தி அணை நீர் மட்டம் குறைந்து, பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலும், நிர்ணயிக்கப்பட்ட பாசன நீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ள குளங்களில் முன்னதாகவே, தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது.இதனால், கிணறு, போர்வெல்களில் தண்ணீர் குறைந்து காய்கறி சாகுபடி மேற்கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.முன்னதாகவே துவங்கிய கோடை வெயில், வறட்சியான காற்று காரணமாக வரும் கோடை சீசனில் பாசன நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. 'கார்' கால மழை பெய்தால், இப்பிரச்னை தவிர்க்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.