தீவிபத்து தடுப்பு விழிப்புணர்வு தீயணைப்பு துறையினர் தயார்
பல்லடம் : கோடை துவங்கும் முன்னதாகவே, வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தீ விபத்துகளும் அதிகரிக்க துவங்கியுள்ளன.பல்லடம் வட்டாரத்தில், ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், பஞ்சு நுால் மற்றும் அரவை மில்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. இவற்றில், காடா துணிகள், பஞ்சு, நுால் பேல்கள், கழிவு பஞ்சு குவித்து வைக்கப்படுவது வழக்கம். பொதுவாக, துணி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், பெரும்பாலும், குடோன்களில்தான் செயல்படுகின்றன.சிமென்ட் ஷீட் அல்லது பிளாஸ்டிக் ஷீட் கொண்ட மேற்கூரைகளில்தான் இவை இயங்கி வருகின்றன. இவற்றில், இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கு வதாலும், கோடை வெயில் காரணமாக ஏற்படும் வெப்பத்தாலும் குடோன்களுக்குள் வழக்கத்தை காட்டிலும் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால், சாதாரண மின் கசிவு ஏற்பட்டாலும், அது பெரும் தீவிபத்தாக மாறிவிடக்கூடும்.குடோன்களில் இருந்து வெப்ப காற்றை வெளியேற்றவும், தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இருப்பினும், அதிக வெப்பம் காரணமாக, இது போன்ற தீ விபத்துகள் தவிர்க்க முடியாததாக ஆகின்றன.இதனால், பல கோடி ரூபாய்களில் முதலீடு செய்து தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில், இது தொடர்கதையாக உள்ளது.தீயணைப்புத்துறையினர் கூறுகையில், ''தொழில் நிறுவனங்களில், தீ விபத்துகளை தடுக்கவும், விபத்துகள் நடைபெறாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.இதுதொடர்பாக தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தொழில் நிறுவனங்களில், தீ விபத்துகளை தடுக்கும் வகையில், தீயணைப்பான்கள், தண்ணீர் வசதி, காற்றோட்டம் ஆகியவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.கோடை துவங்கும் முன்பாகவே இதனை செய்தால்தான், சேதங்களைத் தவிர்க்க முடியும்'' என்றனர்.