உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஞ்சம் இல்லா குறைகள்; நெஞ்சம் பொறுக்காத கவுன்சிலர்கள்

பஞ்சம் இல்லா குறைகள்; நெஞ்சம் பொறுக்காத கவுன்சிலர்கள்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல கூட்டம் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர்கள் பேசியதாவது

ராஜேந்திரன் (இ.கம்யூ.,): 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் போடப்பட்ட பெரும்பான்மையான சிமென்ட் ரோடுகள் இரண்டு ஆண்டுகளுக்குள் பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. கான்கிரீட் கலவை அனைத்தும் போய் ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன.அதற்கு ஒதுக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் அனைத்தும் வீணாகி விட்டது. அந்த பணியை செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.உதவி செயற்பொறியாளர்: கமிஷனர் உத்தரவின் பேரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் போடப்பட்ட ரோடுகள் பழுது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் பின், சீரமைக்கப்படும். அதுபோல் மின் விளக்குகளும் சரி செய்யப்பட்டு வருகிறது.

மோசடி அலுவலர்

ராஜேந்திரன் (இ.கம்யூ.,): வரி போடுவதாக மாநகராட்சி அலுவலர் ஒருவர், ஒரு நபரிடம், 18 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளார். மூன்று ஆண்டு ஆகியும் இதுவரை வரி போடவில்லை. அதுபோல், மற்றொருவரிடம் பாதாள சாக்கடை இணைப்பிற்காக பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். மோசடியில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்டல தலைவர் : அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.,): திருப்பூர், பி.என்., ரோட்டில் நான்காவது திட்ட குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிற்கிறது. தோண்டப்பட்ட இடத்தில் ரோடு போடப்பட்டுள்ளது. எப்படி இணைப்பு கொடுப்பது?லோகநாயகி (தி.மு.க.,): தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

குடிநீருக்கு தவிப்பு

முத்துசாமி (அ.தி.மு.க.,): எட்டு நாளைக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கிறது.புஷ்பலதா (அ.தி.மு.க.,): ரோட்டில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படுவதில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது. குழாய் பதிக்கும் பணியும் பாதியில் நிற்கிறது.இந்திராணி (அ.தி.மு.க.,): மின் விளக்கு காலையில் எரிகிறது. இரவு எரிவதில்லை. சரி செய்ய அதிகாரிகளை அழைத்தால் வருவதில்லை.கவிதா (அ.தி.மு.க.,): பி.என்., ரோட்டில் மின் விளக்கு எரிவதில்லை. நாய் பிடிக்க வந்தால் தகவல் தெரிவிப்பதில்லை.

எப்போது மின் விளக்கு?

செழியன் (த.மா.கா.,): புதிய மின் விளக்கு பொருத்துவது குறித்து கடந்த கூட்டத்தில் பேசியபோது, நாளை பொருத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் இன்று வரை பொருத்தப்படவில்லை. எப்போது பொருத்தப்படும்?மண்டல தலைவர்: இரண்டாவது மண்டலத்துக்கு என, 4 ஆயிரத்து, 132 புதிய மின்விளக்கு வந்துள்ளது. பொருத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் புதிதாக, விடுபட்ட அனைத்து இடங்களிலும் பொருத்தப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ