புத்தடி ரங்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம்
உடுமலை; உடுமலை பள்ளி வலசு புத்தடி ரங்கநாதர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.உடுமலை அருகேயுள்ள பள்ளிவலசு கிராமத்தில், நுாற்றாண்டு பழமையான புத்தடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில்,புதிதாக கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், முன் மண்டபம் மற்றும் கோபுர விமானங்கள் புதுப்பித்தல், வர்ணம் தீட்டுதல் என பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு பெருவிழா பூஜைகள், நேற்று திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடுகளுடன் துவங்கியது.இன்று காலை, 8:00 மணிக்கு, தீர்த்தம் எடுத்து வருதல், கணபதி வேள்வி, முளைப்பாலிகை எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை, 5:00 மணிக்கு, பாலாலயத்தில் இருக்கும் அருட்சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல், யாக சாலை எழுந்தருளல், மூலத்திருமேனிகளுக்கு எந்திரம் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை காலை, 5:00 மணிக்கு, புத்தடி அரங்கநாதருக்கு முதற்கால வேள்வி பூஜை, 108 திரவியாகுதி, நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுதல், தெய்வத்திருமேனிகளுக்கு காப்பணிவித்தல், காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், 8:30 க்கு, திருக்குடங்கள் யாக சாலையிலிருந்து புறப்படுதல்,காலை, 10:15 மணிக்கு, கோபுர விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், 10:30க்கு, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, பெருந்திரு மஞ்சனம், மகா அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.