ஆங்கிலத் தேர்வை காட்டிலும் தமிழுக்கு அதிக ஆப்சென்ட்
திருப்பூர்; பிளஸ் 2 பொதுத்தேர்வு, தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வை, மாணவ, மாணவியர், தனித்தேர்வர் உட்பட, 575 பேர் எதிர்கொள்ளவில்லை.பிளஸ் 2 தேர்வு, கடந்த, 3ம் தேதி துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்த் தேர்வு எழுத, 25, 348 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில், 268 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 179 தனித்தேர்வர்களில், 23 பேர் தேர்வெழுதவில்லை.தமிழ்த் தேர்வை மாணவ, மாணவியர், தனித்தேர்வர் என மொத்தம், 291 பேர் தேர்வெழுதவில்லை. அதே நேரம், ஹிந்தித் தேர்வுக்கு விண்ணப்பித்த, 16 பேரும் பங்கேற்று, தேர்வெழுதினர். பிரெஞ்சு தேர்வில் ஒருவர் மட்டும் பங்கேற்வில்லை. 496 பேர் தேர்வெழுதினர்.ஆங்கிலத்தேர்வு, 6ம் தேதி நடந்தது. 25, 863 பேர் தேர்வெழுத தகுதியானவர்கள்; 259 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 184 தனித்தேர்வர்களில், 25 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மாணவ, மாணவியர், தனித்தேர்வர் சேர்த்து, 284 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.ஆங்கிலத்தை விட தமிழ்த்தேர்வில் அதிகளவில் மாணவர் பங்கேற்கவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழித்தாள் சேர்த்து, 575 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. நாளை (11ம் தேதி) பிளஸ் 2 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது.