உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நஞ்சராயன் குளத்துக்கு உலகளாவிய முக்கியத்துவம் ராம்சர் அங்கீகாரம் பெற்றது

நஞ்சராயன் குளத்துக்கு உலகளாவிய முக்கியத்துவம் ராம்சர் அங்கீகாரம் பெற்றது

திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், உலகளாவிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.உலகளவிய நாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம், கடந்த, 1971ல், ஈரான் நாட்டில் உள்ள, 'ராம்சர்' என்ற நகரில் நிறைவேற்றப்பட்டது. இது, ஈர நிலங்களின் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தமாகும். ஈர நிலம் பாதுகாப்பு சார்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கியத்துவம் இதன் வாயிலாக வழங்கப்படுகிறது.ஈர நிலங்களின் பாதுகாப்பு, அங்கு வாழும் பல்வேறு உயிர்களின் வாழ்விட பாதுகாப்பு, அதன் வாயிலாக பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழலை உறுதிப்படுத்தும் ஒப்பந்தமாகும். அந்த வகையில் ராம்சர் அங்கீகாரம் பெறும் ஈர நிலங்கள், உலகளாவிய முக்கியத்துவம் பெறுகின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஈர நில ஆணையம், 'ராம்சர்' அங்கீகாரத்தை வழங்குகிறது.திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு முழுக்க நீர் ததும்பி நிற்கும் இக்குளம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து போகும் இடமாகவும், அவற்றின் வாழ்விடமாகவும் இருக்கிறது. 310 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் இதுவரை, 157 வகை பறவைகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, இதை பறவைகள் சரணாலயமாக, கடந்த, 2022ல், தமிழக அரசு அறிவித்தது.ராம்சர் அங்கீகாரம் பெறும் ஈர நிலங்கள், உலகளாவிய முக்கியத்துவம் பெறுகின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஈர நில ஆணையம், 'ராம்சர்' அங்கீகாரத்தை வழங்குகிறது.

அழியும் நிலையில் உள்ள உயிரினத்துக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். அல்லது, 20 ஆயிரம் பறவைகளுக்கு மேல் கூடு கட்டி இருக்க வேண்டும் என்பது போன்ற சில விதிமுறை அடிப்படையில் 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதனால், அந்த இடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பிற்காலத்தில் அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் யோசனைக்கும் இடமளிக்காது. உலகளவில், 2,500 ராம்சர் இடங்கள் மட்டுமே உள்ளன. அதில், நஞ்சராயன் குளமும் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்திய அளவில், இது, 85வது; தமிழக அளவில், 18வது 'ராம்சர்' ஈர நிலம் என்ற அங்கீகாரம் பெற்றிருக்கிறது.- ரவீந்திரன், தலைவர், திருப்பூர் இயற்கைக்கழகம்

நஞ்சராயன் குளத்தில், பறவையினங்கள், சிறு, சிறு பூச்சி, பாலுாட்டி இனங்கள் நிரம்ப உள்ளன; இவை பல்லுயிர் பெருக்கத்துக்கும், சூழல் சமநிலை பெறவும் பேருதவி புரிகின்றன. தொழில் நகரான திருப்பூரில், அதுவும் நகரையொட்டி நஞ்சராயன் குளம் இருப்பதும், அதற்கு, 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்திருப்பதும் பெருமைக்குரிய விஷயம். மாவட்ட வனத்துறை, மாவட்ட ஈரநில கமிட்டி பரிந்துரை அடிப்படையில் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது; திருப்பூரின் பெருமைக்கு இதுவும் ஒரு மைல் கல் என்றும் சொல்லலாம்.

- சுரேஷ்கிருஷ்ணன், ரேஞ்சர், வனத்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை