அரசு கட்டடத்தில் விதிமீறல் ஆய்வு நடத்திய அலுவலர்கள்
திருப்பூர்:காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனால், பழைய அலுவலக கட்டடம், மூன்றாண்டு ஏலம் விடப்பட்டது.கடந்தாண்டு, ஜூனில் விடப்பட்ட இந்த கட்ட டத்தை, 1.65 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு விஜயகுமார் என்பவர் எடுத்தார். அதில், தற்போது ஓட்டல் இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் முன் சுற்றுச்சுவர், நுழைவாயிலில் அமைத்திருந்த அரசு சின்னம் ஆகியன விதிமுறைகளுக்குப் புறம்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், ஏலம் விடப்பட்ட மொத்த பரப்பளவான 657.312 ச.மீ., அளவை விட அதிகமான இடத்தைப் பயன்படுத்தியது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.இதனால், நேற்று ஒன்றிய அலுவலக மேலாளர் ராமலிங்கம் தலைமையில், பொறியியல் பிரிவினர் அளவீடு செய்தனர்.விதிமீறல் குறித்து, அறிக்கை தயார் செய்து, கமிஷனரிடம் அளிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.