உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து எளிதாக போலீஸ் முனைப்பு

போக்குவரத்து எளிதாக போலீஸ் முனைப்பு

திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூரில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப, சாலைகள் இன்னும் மாறவில்லை. பிரதான ரோடுகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. விசேஷ தினங்களில் சாலைகள் ஸ்தம்பிக்கின்றன. வாகன நெரிசல் ஏற்பட்டு வந்த இடங்களை போலீசார் கண்காணித்து 'ப்ரீ சிக்னலாக' மாற்றும் ஆலோசனையை மேற்கொண்டனர். திருப்பூர், அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பில் அமல்படுத்தினர். இது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதுடன், வாகனங்களும் சீராக சென்று வருகின்றன.

போலீஸ் கமிஷனர் அறிவுரை

கடந்த, 5ம் தேதி கமிஷனராக பொறுப்பேற்ற லட்சுமி, நகரில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். கடந்த, மூன்று வாரங்களில் நகரில் தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களை போக்குவரத்து போலீசார் துரிதமாக செய்துள்ளனர்.

தடுப்பு இடைவெளி அடைப்பு

விபத்து ஏற்படும் வகையில், பிரதான சாலைகளின் மையத்தடுப்புகளில் உள்ள இடைவெளிகளை போலீசார் அடைத்து வருகின்றனர். சாலைகளில், வாகனங்களை சீராக நிறுத்த ரோட்டின் இருபுறங்களில் 'ரோப்'களை ஏற்படுத்தினர். குமரன் ரோட்டில் கோர்ட் ரோடு, சபரி ரோடு சந்திக்கும் பகுதியில், வாகன ஓட்டிகள் தாறுமாறாக கடந்து வந்தனர்.போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயத்துடன் இருந்தது. தற்போது, அந்த இடத்தில் வாகன ஓட்டிகள் விதிமீறல்களில் ஈடுபடாமல் இருக்க ரோட்டின் மையப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.---திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி அலுவலக சந்திப்பு

'ப்ரீ சிக்னல்' ஆக மாறுகிறதுமாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது:நகரில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி துரிதமாக நடக்கிறது. நெரிசல் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அதை தற்போது களைந்து வருகிறோம். மாநகராட்சி அலுவலக சந்திப்பு சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும், சிக்னலில் நிறுத்தாமல் செல்வதற்கு ஏதுவாக 'ப்ரீ சிக்னல்' விரைவில் அமல்படுத்த உள்ளோம். இதன் காரணமாக, வாகனங்கள் சீராக செல்லும்; நெரிசல் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வாகனங்கள் நிறுத்த வசதி

மாநகராட்சியையொட்டி வெளியே சாலையோரம் பொதுமக்கள் டூவீலர்களை நிறுத்தி விட்டு, கடைகளுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார் பார்க்கிங் வசதியை செய்துள்ளனர். அதன் எதிர்ப்புறம் மற்றும் பாலம் அருகே கார்களை நிறுத்தவும், பெருமாள் கோவில் பின்புறம், எதிரே உள்ள வீதியில் வாகனங்களை நிறுத்தவும் போலீசார் பார்க்கிங் வசதியை செய்துள்ளனர். பொதுமக்களுக்கு தெரியும் வகையில், சம்பந்தப்பட்ட இடங்களில் பெயின்ட் செய்துள்ளனர். பார்க்கிங் போர்டுகள் இன்னும் சில தினங்களில் வைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி