போதை ஊசி - மாத்திரைகளுடன் புகார்; பொதுமக்கள் துணிச்சல்: போலீசார் அதிர்ச்சி
பல்லடம் : பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட குன்னாங்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று, போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளுடன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தனர்.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர், மாலை மற்றும் இரவு நேரங்களில், கூட்டம் கூட்டமாக கூடி மது அருந்துகின்றனர்.குடியிருப்பு பகுதி அருகே இவ்வாறு மது அருந்துவதால், பெண்கள் அச்சப்படுகின்றனர் என, இப்பகுதியை சேர்ந்த சிலர், இளைஞர்களிடம் கேள்வி எழுப்பினர். கேள்வி எழுப்பிய நபரை இளைஞர்கள் தாக்கினர். மேலும், வீட்டுக்கு வந்து பெண்களிடம் மிரட்டல் விடுகின்றனர்.பெண் குழந்தைகளை வைத்துள்ள நாங்கள், எவ் வாறு இங்கு குடியிருப்பது என்றே தெரியவில்லை. இளைஞர்கள் மது தான் அருந்துகின்றனர் என்று நினைத்திருந்த நிலையில், போதை ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.கோவில் மற்றும் அரசு பள்ளியை சுற்றி இதுபோன்ற சமூக விரோத செயல் நடக்கிறது. குடியிருப்பு பகுதியில் நடந்து வரும் இச்சம்பவம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது.எனவே, இளைஞர்களிடம் உள்ள போதைப் பழக்கத்தை தடுக்க வேண்டும். யார் வாயிலாக போதைப் பொருள் கிடைக்கிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, போதை ஊசிகள் மாத்திரைகளை எடுத்து வந்த பொதுமக்கள், போலீசாரிடம் அவற்றை ஒப்படைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.போலீஸ் ஸ்டேஷனுக்கு, போதை ஊசி மாத்திரைகளை எடுத்து வந்து புகார் அளித்த சம்பவம், பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.'போதை'புதுாராகும் கரைப்புதுார்
சில தினங்களுக்கு முன், கரைப்புதுார் ஊராட்சி சின்னக்கரையில் உள்ள தனியார் கல்லுாரி அரு கிலும், எம்.ஏ.நகர் குடியிருப்பு பகுதி அருகிலும், நுாற்றுக்கணக்கான போதை ஊசிகள், மருந்து மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதுபோல், தற்போது, குன்னாங்கல்பாளையம் கிராமத்தில் கிடந்த போதை ஊசி மாத்திரைகளை, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார், சமூக விரோத செயல்களால் 'போதை'புதுாராக மாறி வருகிறது.