வாழ்வாதாரத்துக்கு தேவை குளத்து மண்! அலைக்கழிக்கும் வருவாய்த்துறையினர்
உடுமலை;உடுமலை பகுதியில், மண்பாண்ட உற்பத்திக்கு தேவையான மண் அள்ள வருவாய்த்துறையினர் அனுமதி கிடைக்காததால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.உடுமலை மருள்பட்டி, ஜல்லிபட்டி, தின்னப்பட்டி, பூளவாடி, மரிக்கந்தை, புக்குளம் உள்ளிட்ட கிராமங்களில், பாரம்பரியமாக மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் குடும்பத்தினர் அதிகளவு உள்ளனர்.மண்பாண்டம், அகல் விளக்குகள் மற்றும் கிராம திருவிழாக்களுக்கான உருவார பொம்மைகள் தயாரிப்பதன் வாயிலா வருவாய் ஈட்டி வருகின்றனர். மண் முக்கியம்
மண்பாண்டம் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்க, பிரத்யேகமான மண் தேவைப்படுகிறது. இத்தகைய மண் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி மற்றும் திருப்பூர் மாவட்டம், கொழுமம் முத்துக்குளத்தில் மட்டுமே கிடைக்கிறது.முன்பு, மண் பாண்ட தொழிலாளர்களுக்கு இக்குளங்களில் மண் எடுக்க வருவாய்த்துறையினர் அனுமதி வழங்கி வந்தனர். ஆண்டுக்கு, அதிகபட்சமாக டிராக்டரில் இரண்டு லோடு மண் மட்டுமே மண்பாண்ட தொழிலாளர்கள் அக்குளங்களில் இருந்து எடுத்து வருவார்கள். அந்த குளத்து மண்ணுடன் பிற மண்ணை கலந்து மண்பாண்டங்கள் தயாரிப்பது வழக்கம்.கெடுபிடிகள் ஏராளம்உடுமலை சுற்றுப்பகுதிகளில், குளங்களில் இருந்து மண் எடுக்க, அரசாணை வெளியிடப்பட்டு, பொக்லைன் மற்றும் இதர இயந்திரங்களை பயன்படுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கான லோடு மண் அள்ளப்படுகிறது.இதே போல பல வகையான கனிமவளங்களும் எவ்வித தடையும் இல்லாமல், கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், தங்களின் பாரம்பரிய தொழிலுக்காக இரு டிராக்டர் லோடு மண் எடுக்க மண் பாண்ட தொழிலாளர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுமதி கொடுப்பதில்லை.கோதவாடி குளம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளதால் அங்கிருந்து மண் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில், கொழுமம் குளம் இடம் பெறவில்லை. எனவே, மண் எடுக்க வருவாய்த்துறையினர் அனுமதிப்பது இல்லை.இத்தகைய நடைமுறை சிக்கல்களால், முக்கிய சீசனில் தேவையான மண்பாண்டம் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்க முடியாமல், தொழிலாளர்கள் வருவாய் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொஞ்சம் பாருங்க
மக்கள் பயன்பாட்டுக்கான பாரம்பரிய பொருட்கள் தயாரிக்கும் மண் பாண்ட தொழிலாளர்கள், குளத்தில் அள்ளும் மண்ணை மாற்றுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த வாய்ப்பில்லை. எனவே, உள்ளூர் வி.ஏ.ஓ., முன்னிலையில், சம்பந்தப்பட்ட குளத்தில், டிராக்டரில் மண் எடுக்க வருவாய்த்துறையினர் அனுமதிக்கலாம்.இதனால், குளத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. மாற்றாக பல்வேறு விதிமுறைகளை தெரிவித்து, மண் எடுக்க தடை விதிப்பதால், வருவாய் இழந்து விளிம்பு நிலையிலுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.இதனால், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கோரிக்கையை பரிசீலித்து குளங்களில் மண் எடுக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.