ஒப்பந்த கூலி உயர்வு வழங்க விசைத்தறியாளர் வலியுறுத்தல்
பல்லடம்; திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. தொழிலாளர் உதவி கமிஷனர் பிரேமா முன்னிலை வகித்தார்.பல்லடம் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த, 2021ம் ஆண்டு அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்த கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஒப்பந்தப்படி கூலியை வழங்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கி வருகின்றனர். ஒப்பந்தத்தின்படி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்' என்றனர்.சோமனுார் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஒன்பது முறை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் நிராகரித்தனர். கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்து வழங்கி வருகின்றனர். 2021ல் நடந்த பேச்சுவார்த்தையின்படி, 20 முதல் 23 சதவீதம் வரை கூலி உயர்வை அமல்படுத்தாததால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். நியாயமான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் பெற்றுத் தர வேண்டும்' என்றனர்.பல்லடம், சோமனுார், அவிநாசி, 63 வேலம்பாளையம், கண்ணம்பாளையம், மங்கலம், தெக்கலுார், பெருமாநல்லுார், புதுப்பாளையம் ஆகிய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கருத்துக்களை கேட்டறிந்த கலெக்டர், ஜவுளி உற்பத்தியாளருடன் ஆலோசித்த பின் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.