அறுவடை துவங்கியதும் விலை வீழ்ச்சி; பூசணி விவசாயிகள் கவலை
உடுமலை : நடப்பு சீசனில், பூசணிக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், உடுமலை வட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை சின்னவீரம்பட்டி, தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதுார், கோட்டமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில், பூசணிக்காய்(அரசாணி) சாகுபடி செய்கின்றனர்.நடப்பு சீசனில், தற்போது அறுவடை துவங்கியுள்ளது. பொங்கல் சீசனில், உள்ளூர் சந்தைகளில், நல்ல விலை கிடைக்கும்.தற்போது, உள்ளூரில் போதிய தேவை இல்லாததால், வடமாநிலங்களுக்கு விற்பனைக்காக பூசணி கொண்டு செல்லப்படுகிறது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் கிடைக்கிறது.விவசாயிகள் கூறியதாவது: பூசணிக்காய் தற்போது கிலோ, 5 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை, கிலோவுக்கு, 14 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது.அறுவடை துவக்கத்திலேயே விலை சரிந்துள்ளது. இதனால், சாகுபடிக்கு செலவிட்ட தொகை கிடைப்பதே கேள்விக்குறியாகியுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.