உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பண்ணை சார்ந்த தொழில் ஊக்குவிப்பு அவசியம்

பண்ணை சார்ந்த தொழில் ஊக்குவிப்பு அவசியம்

''இயற்கை விவசாயம் சார்ந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, அது சார்ந்த பால் உற்பத்தி, கோழிப்பண்ணை வைப்பது போன்ற பண்ணை சார்ந்த தொழிலில் நிறைய 'ஸ்டார்ட் அப்'களில் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்'' என்கிறார், திருப்பூர், காலேஜ் ரோட்டில் இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடி நடத்தி வரும் இளம் தொழில்முனைவோரான சுஜிதா.அவர் கூறியதாவது:இயற்கை விளைபொருட்களின் விலை சற்றே கூடுதல் என்பதால், வசதி படைத்தவர்கள் தான் பெரும்பாலும் இத்தகைய பொருட்களை வாங்குவர். ஆனால், 'கோவிட்' பாதிப்புக்கு பின், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இயற்கை விளைபொருள் மற்றும் சிறு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது; விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.

தேவை பூர்த்தியே சவால்

இயற்கை விளைபொருள், காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு பழகியவர்கள், 'எப்போதும் அந்தப் பொருட்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டும்' என, நினைக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில பழங்கள், காய்கறிகள், இயற்கையாக விளையக்கூடியவை என்பதால், குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே கிடைக்கும்; ஆண்டு முழுக்க கிடைக்காது. இதனால், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது, சவாலானதாக இருக்கிறது.

இயற்கைப்பொருள் மீது ஆர்வம்

நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட குறிப்பிட்ட நோய் பாதிப்பை குணப்படுத்தும், கட்டுப்படுத்தும் தன்மையுள்ள இயற்கை விளைபொருட்களை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நடுத்தர மக்களும் இயற்கை விளைபொருள் உணவு பொருட்கள் மற்றும் சிறு தானியங்களை வாங்கி உண்ணும் நிலை வர வேண்டும்; அத்தகைய உணவுப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.

இளைஞர்கள் முன் வரவேண்டும்

இந்நிலையை எட்ட இயற்கை விவசாயத்தில் அதிகளவு இளைஞர்கள் ஈடுபட வேண்டும். விவசாயிகள் வழங்கும் விளைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதுடன், விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் போது, அதிகளவு விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வாய்ப்புண்டு.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை