நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் உடுமலை கோட்டத்திற்கு இரண்டு ஒதுக்கீடு
உடுமலை;கால்நடைத்துறை உடுமலை கோட்டத்தில், குறிச்சிக்கோட்டை, குடிமங்கலம் பகுதிகளுக்கு, இரு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்படுகிறது.அவ்வகையில், கால்நடைத்துறை சார்பில், தேசிய கால்நடை தடுப்பூசி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக, ஏழு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், உடுமலை கோட்டத்திற்கு இரு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு வாகனங்கள், குறிச்சிக்கோட்டை மற்றும் குடிமங்கலம் வட்டார கிராம பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள், தொலை துார கிராமங்களிலுள்ள, கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராம பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.வாகனங்களில், கால்நடை மருத்துவர், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கிராமங்களிலுள்ள, பசு, எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட வழித்தடங்களில், தினமும் தலா இரு கிராமங்களுக்கு செல்லும். அங்கு, காலை, 8:00 மணி முதல் பிற்பகல், 2: 00 மணி வரை கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.அதே பகுதிகளில், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை, 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் அழைப்புகளை ஏற்று, கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படும்.கிராமங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் வாயிலாக, விவசாயிகள் பெரிதும் பயனடைவர்.இவ்வாறு, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.