கண்டெடுத்த போன் ஒப்படைப்பு அபூர்வம்! விவசாயியின் நேர்மைக்கு பாராட்டு
திருப்பூர்;அரசு பஸ்சில் பயணி ஒருவர் தவற விட்ட விலை உயர்ந்த மொபைல் போனை, விவசாயி ஒருவர் எடுத்து, திரும்ப வழங்கியது பலரின் பாராட்டையும் பெற்றது.கோவையில் இருந்து திருப்பூருக்கு வரும் அரசு பஸ்சில், நீலகிரி மாவட்டம், கூடலுார், ஒவேலியை சேர்ந்த விவசாயி சத்தியசீலன், பயணம் செய்தார். அவிநாசி பஸ் ஸ்டாண்டில், வடமாநிலத்தை சேர்ந்த தந்தையும், மகனும் அதே பஸ்சில், ஏற்றி சத்தியசீலன் அருகே அமர்ந்தனர்.அப்போது, சத்தியசீலனிடம் பேசிய வடமாநிலத்தை சேர்ந்த இருவரும், 'திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தால் சொல்லுங்கள்,' என்ற அரைகுறை தமிழில் பேசினர். அதேபோல, அவரும் சொல்ல, எஸ்.ஏ.பி., ஸ்டாப்பில் இருவரும் இறங்கி, டவுன் பஸ்சில் ரயில்வே ஸ்டேஷன் சென்று விட்டனர்.அதேசமயம் பஸ் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றவுடன், இருக்கையில் சத்தியசீலன் பார்த்தபோது, விலை உயர்ந்த மொபைல் போன் இருந்தது. அதனை எடுத்து பத்திரப்படுத்திய போது, அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், தனக்கு அருகில் அமர்ந்து பயணித்த வடமாநிலத்தவர் என்பது தெரிந்து, தான் புதிய பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக கூறினார்.அடுத்த சில நிமிடங்களில், தந்தையும், மகனும் ஆட்டோவில் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, மொபைல் போனை பெற்று கொண்டனர். பஸ்சில் தொலைந்த மகனின் விலை உயர்ந்த மொபைல் போனை திரும்ப வழங்கிய சத்தியசீலனை, அந்த தந்தை கட்டியணைத்து. ஆனந்த கண்ணீருடன், நன்றி தெரிவித்தார்.பெயருக்கு ஏற்றவாறு, அடுத்தவரின் மொபைல் போனை ஒப்படைத்த, சத்தியசீலன், நீலகிரி மாவட்ட பேரிடர் மீட்புக்குழு உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.