ரோட்டில் தேங்கும் நீர்; வெளியேற்ற நடவடிக்கை
திருப்பூர்; நொய்யல் கரை ரோட்டில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் இரு புறங்களிலும் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் நொய்யலில் வந்து சேரும் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது.இதற்காக கழிவுநீர் கால்வாய்கள் இணைத்து, வடிகால் மூலம் ஆங்காங்கே அமைக்கப்படும் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்படும். இதற்காக நொய்யல் கரையை ஒட்டிய ரோட்டில் கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பில் சில இடங்களில் ரோட்டை விட உயரமாக இந்த வடிகால் அமைந்துள்ளது.மேலும், மூடப்பட்ட நிலையிலும் இது கட்டப்பட்டுள்ளது. இது போன்ற இடங்களில் மழை பெய்யும் போது, மழைநீர் கடந்து செல்ல வழியில்லாமல் ரோட்டில் தேங்கி நிற்கும் நிலை காணப்பட்டது.இதற்கு தீர்வு காணும் வகையில், இது போன்ற நிலை காணப்படும் இடங்களில், வடிகாலின் மேற்புறம், பக்கவாட்டில் துளைகள் அமைக்கப்படுகிறது.இதன் மூலம் ரோட்டில் மழைநீர் எங்கும் தேங்காமல் வடிகாலில் சென்று சேர்ந்து விடும். ரோடு அரிக்கப்படுவதும், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் குறையும்.