சீனியர்களுடன் ஓடியது சிலிர்க்க வைத்தது! தேசிய தடகளத்தில் பங்கேற்ற மாணவி உற்சாகம்
திருப்பூர்;''ஒலிம்பிக் உள்ளிட்ட தேசிய அளவில் பிரபலமான வீராங்கனையருக்கு போட்டியாக ஓடியது, புதிய அனுபவத்தை கொடுத்தது'' என, தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று திரும்பிய, திருப்பூர் மாணவி ஸ்ரீவர்தனி தெரிவித்தார்.தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி, சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. தேசிய அணிக்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் முக்கியத்துவம் பெற்ற இந்த விளையாட்டில், ஒலிம்பிக் தொடரில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் முதற்கொண்டு, தேசிய, சர்வதேச அளவில் ஜொலிக்கும் பிரபல வீரர், வீரங்கனைகள் பங்கேற்றனர்.இதில், 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், தமிழகம், கேரளா, உ.பி., பஞ்சாப், கர்நாடகா, ரயில்வே ஸ்போர்ட்ஸ், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 17 வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, சமீபத்திய பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வித்யா, ஸ்ரீவர்தனி மற்றும் திவ்யா ஆகிய, 3 பேர் பங்கேற்றனர். இதில், தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை, தமிழக வீராங்கனை வித்யா முறியடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.தமிழக அணி சார்பில் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீவர்தனி கூறியதாவது;இதுவரை நான் பங்கேற்ற மாநில, தேசிய அளவிலான போட்டிகளில், ஜூனியர் பிரிவில் மட்டுமே பங்கேற்று வந்துள்ளேன். முதன்முறையாக சீனியர் பிரிவில் பங்கேற்றேன். சீனியர் வீராங்கனைகளின் திறமையை கண்டு வியந்ததுண்டு. தற்போது, அவர்களுடன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.பங்கேற்ற வீரர்கள், 3 பிரிவாக பிரிக்கப்பட்டனர். தலா, 6 பேர் அடங்கிய இரு பிரிவு, 5 பேர் அடங்கிய ஒரு பிரிவு என போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதலிரு இடம் பிடித்த இருவர் உட்பட, 8 பேர், இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.நான், 5 பேர் அடங்கிய, 3வது பிரிவில் பங்கேற்று, நான்காம் இடம் பிடித்தேன். ஒட்டு மொத்தமாக பங்கேற்றோர் அளவில், 9வது இடம் பிடித்தேன். இதனால், இறுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த போட்டியில் பங்கேற்றது நல்ல அனுபவத்தை கொடுத்தது; தொடர்ந்து, என் திறமையை வளர்த்துக் கொள்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.