வெள்ளி விழா கண்ட உழவர் சந்தை
திருப்பூர்:திருப்பூர் வடக்கு உழவர் சந்தை துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்தை வளாகத்தில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வடக்கு உழவர் சந்தை, கடந்த, 2000ம் ஆண்டு ஆக., 30ம் தேதி துவங்கப்பட்டது. சந்தை துவங்கி, நேற்றுடன், 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று, உழவர் சந்தை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார். வெள்ளி விழா கொண்டாட்ட சலுகையாக, தோட்டக்கலை சுயஉதவிக்குழு, 'டான்வா' பண்ணை மகளிர் குழு மூலம், இரண்டு கிலோ பெரிய வெங்காயம் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பத்து வகையான காய்கறிகள், கீரைகளுடன் சேர்த்து, 50 ரூபாய் விலையில் நேற்று ஒரு நாள் விற்கப்பட்டது. பெண் விவசாயி உமாமகேஷ்வரி விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினார். உழவர் சந்தை அலுவலர்கள், உழவர் சந்தை விவசாயிகள், நுகர்வோர் இணைந்து சந்தையில் மரக்கன்று நட்டனர்.----வடக்கு உழவர் சந்தை வெள்ளி விழாவையொட்டி, பொதுமக்களுக்கு சலுகை விலையில் காய்கறித்தொகுப்பு வழங்கப்பட்டது.