திடீரென பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
பொங்கலுார்; கடந்த மூன்று மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் மழை இன்றி வறண்ட வானிலை நிலவியது.பொங்கலுார் வட்டாரத்தில், பி.ஏ.பி.,யில் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, முதல் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், இரண்டாம் சுற்று தண்ணீர் திறப்பது தள்ளிப் போகிறது. இதனால், மாசி பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கருகி வந்தன. புல்வெளிகள் வறண்டதால் கால்நடை தீவனத்திற்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை மாவட்டத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் காரணமாக நிலவிய சூடு தணிந்து குளிர்ச்சி நிலவியது.இந்த மழை மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களுக்கும், தென்னை, வாழை உள்ளிட்ட மரப்பயிர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.