உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை நுாலிழை ஆடை; கோலோச்சுமா திருப்பூர்?

செயற்கை நுாலிழை ஆடை; கோலோச்சுமா திருப்பூர்?

திருப்பூர், : ''திருப்பூரிலேயே, தரமான செயற்கை நுாலிழை ஆடைகளை உருவாக்கி, வடமாநிலங்களுக்கான விலையில் வழங்கும் வகையில் உற்பத்தியாளர்கள் உரு வாக வேண்டும். செயற்கை நுாலிழை பின்னல் துணி உற்பத்திக்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்'' என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் நாட்டிலேயே பிரதான நகரமாக திகழ்கிறது. இங்கு உற்பத்தியாகும் பருத்தி நுாலிழை பின்னலாடைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.

சவால் மிகுந்தபிராசசிங் பணி

பருத்தி நுாலிழையில் இருந்து, பின்னல் துணி உருவாக்குவது எளிது என்றாலும், அதற்கு பிறகு வரும் 'பிராசசிங்' பணி என்பது சவாலானது; அதிக பொருட்செலவு ஏற்படுத்தக்கூடியது. இதன் காரணமாக, பின்னலாடை தொழிலை துவக்க மற்ற மாநிலங்கள் முன்வரவில்லை.

செயற்கை நுாலிழைஆடைக்கு மவுசு

நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை உயர்த்த, பாலியஸ்டர் போன்ற செயற்கை நுாலிழை பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு, வடமாநிலங்களில், பாலியஸ்டர், நைலான் போன்ற செயற்கை நுாலிழை பின்னல் துணி உற்பத்தி மேம்பட்டுள்ளது.அதாவது, சாதாரண பின்னல் துணியிலேயே, 30க்கும் அதிகமான டிசைன்களில் உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். நீண்ட யோசனைக்கு பிறகு, திருப்பூரில் உள்ள வர்த்தகர்கள், செயற்கை நுாலிழை துணியை வாங்கி விற்கும் பணியை துவக்கியுள்ளனர்.

'தலைவலி' இல்லைமாற ஆயத்தம்

வடமாநிலங்களில் உற்பத்தியாகும் செயற்கை நுாலிழை துணிக்கு, எளிய முறையில் சாயமிட்டு, சாயமிட்ட துணியாக விற்கின்றனர். இதனால், 'பிராசசிங்' தலைவலி இருக்காது என்பதால், குறு, சிறு உற்பத்தியாளர்கள் இத்தகைய உற்பத்திக்கு மாற ஆயத்தமாகி வருகின்றனர்.கடந்த 30 ஆண்டுகளாக, திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் ஆடைகளை வாங்கிச்சென்று, வடமாநில சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் ஆடைகளை காட்டிலும், விலை குறைவான ஆடை, வடமாநிலத்திலேயே உற்பத்தி செய்ய முடிகிறது. சாயமிடப்பட்ட பின்னல் துணி கிடைப்பதால், எளிமையாக ஆடையாக வடிவமைக்க முடிகிறது.இதனால், வடமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், திருப்பூர் வந்து கொள்முதல் செய்வது குறைந்து வருகிறது; திருப்பூரில் உள்ள தொழிலாளரை அழைத்து சென்று, வடமாநிலங்களிலேயே, சிறிய யூனிட் துவக்கி விட்டனர்.

திருப்பூரிலேயே உற்பத்திவழிமுறைகள் தேவை

இனியும் திருப்பூர் தொழில்துறையினர் மவுனம் காத்திருக்க கூடாது; திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க, புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும்.அதாவது, திருப்பூரிலேயே, தரமான செயற்கை நுாலிழை ஆடைகளை உருவாக்கி, வடமாநிலங்களுக்கான விலையில் வழங்கிட முன்வர வேண்டும்; எல்லாவற்றையும் விட, திருப்பூரிலேயே, செயற்கை நுாலிழை பின்னல் துணி உற்பத்திக்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை