பாயும் புலியான ஆபீசர் பதுங்குவது ஏனோ...
சித்ராவும், மித்ராவும் திருமுருகன்பூண்டி கோவில் தேர்த்திருவிழாவுக்கு சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அருகிலுள்ள பூங்காவில் அமர்ந்தனர்.''அபராதம் கட்டிட்டு வந்தாலும் வண்டியை தராமல் இழுத்தடிக்கின்றனராம்...'' என ஆரம்பித்து, ''பெருமாநல்லுார் ஸ்டேஷனில் பணியாற்றும் 'முத்து' அதிகாரி ஒருத்தர், வாகன தணிக்கை செய்து பைன் போடுகிறார். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் கோர்ட்டில் பைன் கட்டிட்டு வந்தால் கூட வண்டியை கொடுப்பதில்லை. சில நாள் அலைய வைத்து தான் தருகிறார். அதுமட்டுமில்லாம, வக்கீல் பீஸ் இவ்வளவுனு சொல்லி கட்டாய வசூல் பண்ணிடறாராம்...''''இதேபோல, தாராபுரம் சப்-டிவிஷனில் உள்ள 'மூலை' மற்றும் 'அல...' ஸ்டேஷன்களில், உள்ள ரைட்டர்கள், ஏற்கனவே, நடவடிக்கைக்கு ஆளான நபர்களாக இருக்கின்றனர். இதனால, அவர்கள் சொல்லறது தான் சட்டமாம். இந்த மேட்டரைஎஸ்.பி., கண்டுகிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்,'' முடித்தாள் மித்ரா.''ம்...ம்... எஸ்.பி., என்ன ஆக் ஷன் எடுக்கிறாருன்னு வெயிட் பண்ணலாம்...'' என்ற சித்ரா, ''ரூரல் ஏரியாவில எங்க பார்த்தாலும், மனமகிழ் மன்றம், சட்டவிரோத சரக்கு விற்பனை என தாராளமாக இருக்கு. மக்கள் புகார் செஞ்சாலும் கூட, சும்மா ஒரு கேஸ் போட்டு கணக்கு காட்டறத வழக்கமா வெச்சுருக்காங்க. நாமளும் அடிக்கடி இல்லீகல் சேல்ஸ் பற்றி பேசறோம்,''''ஆனா, நடவடிக்கை என்னவோ, பூஜ்யம்' தான். போன வாரம் கூட, கோவாவில் இருந்து, 2 ஆயிரம் மது பாட்டில் கொண்டு வந்த கும்பலை கோவை சி.ஐ.யு., அப்புறம் அவிநாசி மதுவிலக்கு போலீசார் சேர்ந்து பிடிச்சாங்க. ஆனா, இந்த விஷயத்தை கூட, நம்ம டிஸ்டிரிக்ட் போலீஸ் சொல்லலை. என்ன காரணம்னு தெரியல. ஆனால், கோவை சி.ஐ.யு.,பிரிவினர் நடந்ததை தெளிவாக சொல்லிட்டாங்க,'' என்றாள் சித்ரா. இவர்கள் வழி...தனி வசூல் வழி!
''லிங்கேஸ்வரர் ஊரில் இரவு நேரத்தில் லாரிக்காரங்களை நிறுத்தி பில்லு தீட்டுறாங்களாம்க்கா...'' என்றாள் மித்ரா.''அது என்ன மேட்டர்?''''அக்கா... அந்த ஊரோட எல்லையில் ஆரம்பித்து ஊருக்குள்ள போற வரைக்கும் என, நாலஞ்சு இடங்கள்ல நள்ளிரவில் வாகன தணிக்கை செய்யறாங்க. இது நல்ல விஷயம் தான். ஆனால், ஒன்றிரண்டு இடத்தில், அதிகாரி யாருமே இல்லாம, வெறும் ரெண்டு போலீஸ் மட்டும் நின்னு, 'கல்லா' கட்றாங்களாம். இதுக்காகவே, தேவையில்லாத இடங்களில் ஏகப்பட்ட பேரிகார்டுகளை வச்சு, வாகன ஓட்டிகளுக்கு இம்சை குடுக்கறாங்க...''''அங்க மட்டுமில்ல. ரூரல் டிஸ்ட்ரிக்ட்டில், ஏகப்பட்ட இடங்களில் நெலமை இப்டித்தான் இருக்கு. இந்த மாதிரி பிரச்னைகளை பார்த்து, 'பாய' வேண்டிய எஸ்.பி., ஏன் பதுங்குறார்னு தெரியலே...'' விளக்கினாள் மித்ரா.''இல்லடி மித்து, இந்த வாரம் எஸ்.பி., கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாருன்னு நம்பலாம்...'' என்றாள் சித்ரா.''பார்க்கலாம்,'' என்ற மித்ரா, ''போன வாரம் நடந்த கார்ப்பரேஷன் கூட்டத்தில் அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஒருவர், நகரில் உள்ள ரோட்டின் நிலைமையை வெளிக்காட்டும் விதமாக கையில் கட்டுடன் வந்ததை பார்த்ததும் மேயருக்கு அப்படி ஒரு டென்ஷன். 'காயம் உள்ளதுபோல் போட்ட கட்டுத்துணிகளை அகற்றி விட்டு, கூட்டத்துக்கு வரவும். இல்லாவிட்டால், நடவடிக்கை எடுப்பேனு கூறி கொந்தளிச்சுட்டாரு,''''பிரச்னையே வரக்கூடாது என்ற நோக்கில், யார் என்ன சொன்னாலும் அதனை கண்கொத்தி பாம்பாக 'வாட்ச்' செய்து, அதற்கு பதில் தருவதிலேயே மேயர் கவனம் செலுத்துகிறாராம். பிரச்னை குறித்து, யார் என்ன சொன்னாலும் கூட, மேயரால் காது கொடுத்தும் கேட்கவும், ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அப்புறம் எப்படி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்,'' என்றாள் மித்ரா. மினிஸ்டர் பி.ஏ.,ன்னாஎன்ன சும்மாவா?
''கடந்த சில மாதங்களுக்கு முன் மண் கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய ஆர்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்த மினிஸ்டர் பி.ஏ.. பற்றி ஞாபகம் இருக்கா மித்து?''''ம்.. இருக்கு. சொல்லுங்க்கா''''மண் திருட்டை தடுத்த ஆபீசருக்கு இடைஞ்சல் செய்ததால், விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு பலமா கிளம்பியது. உடனே அவரை அவிநாசிக்கு மாத்தினாங்க. ஆனாலும், கலெக்டர் உத்தரவை மதிக்காம, அங்க போய் ஜாய்ன் பண்ணாம டிமிக்கி கொடுத்தாரு. இப்ப, நீண்ட நாளைக்கு பின்னாடி, மீண்டும் மினிஸ்டர் பி.ஏ.,வாகவே கலெக்டர் போட்டுட்டாரு. ஆக மொத்தம், அதிகாரம் தான் வெல்லும்ங்கறது நிரூபணமாகிவிட்டது,'' சிரித்தாள் சித்ரா.''அதுவேணா அப்டித்தாங்க்கா...'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''அத்திக்கடவு - அவிநாசி திட்டம் யார் கொண்டு வந்ததுன்னு நிரூபணம் செய்யணும்னு, அ.தி.மு.க.,வினர் கையில கங்கணம் கட்டாத குறையா, களமிறங்கிட்டாங்க. விஷயம் என்னன்னா, அத்திக்கடவு திட்டத்தால் நெல் சாகுபடி நடக்குதுனு, அக்கட்சி தலைமைக்கு தகவல் போயிருக்கு. உடனடியா, 'நேர்ல போய் விவசாயிகள பார்த்து, அதுதொடர்பா விளம்பரப்படுத்துங்க. நம்ம கட்சி திட்டம்னு விவசாயிகள் வாயால பாராட்ட வைக்கோணும்'னு தலைமையில் இருந்து உத்தரவு வந்திருக்கு,''''உடனே, உஷாரான நிர்வாகிகளும், பச்சை துண்டு ஒரு பண்டல் வாங்கிட்டு, தோள்ல போட்டுட்டு, களத்துக்கு போய்ட்டாங்க. 52 வருஷத்துக்கு அப்புறம், நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் சால்வை போட்டு பாராட்டினாங்க, பதிலுக்கு வானம் பார்த்த வடக்கு ஒன்றியத்தில, பசுமை திரும்பிடுச்சுங்கோன்னு அ.தி.மு.க.,வினரை பாராட்டி தள்ளிட்டாங்க போங்க,'' விளக்கினாள்.''மித்து, அவிநாசி ஒன்றியத்துல, '.......குளம்' கிராம அதிகாரி சரியான டைமுக்கு ஆபீஸ் வர்றதில்லைனு மக்கள் புலம்புறாங்க. வேற என்ன வேலைக்கு போறார்னு தெரியலை, மத்தியானம் ஒரு மணிக்கு வர்றதே பழக்கமாகிடுச்சு. இதனால, வி.ஏ.ஓ.,வை சந்திக்க மக்கள், ரொம்ப நேரம் வெயிட் பண்ண வேண்டியிருக்கு. 'டியூட்டி' நாளில் சரியான நேரத்துக்கு வந்து வேலை பார்த்தா போதும், தாலுகா ஆபீசில வேலை இருக்குன்னு சொல்லியே இப்படி 'டேக்கா' குடுக்றாருன்னு மக்கள் கேள்வி கேட்கிறாங்க...'' என்றாள் சித்ரா.''ஒருவேளை அடிக்கடி 'பண்ணாரி' போயிடுவாரோ...'' சொன்ன மித்ரா, ''வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர் அதிகம் உள்ள திருப்பூரில், ரேஷன் பொருள் ஒதுக்கீடு, 88 சதவீதம் மட்டும் தான் நடக்குதாம். வெளி மாவட்ட கார்டுகளுக்கு பொருள் வழங்கிய பின், கடையில் உள்ள கார்டுதாரர் வந்தா, திருப்பி அனுப்புறாங்க. இதனால், கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடுதலா, பொருள் ஒதுக்குங்கனு, சேல்ஸ்மேன் கேட்டார்னா, 'அலார்ட்மென்ட்' வச்சே சமாளிங்கன்னு சொல்ற அதிகாரிகளை வச்சு என்ன பண்றதுனு ரேஷன் ஊழியர்கள் புலம்பறாங்க்கா,'' என்றாள். 'பான்பராக்' வித்துக்கோ...பணத்தை அடிச்சுக்கோ
''திருப்பூரில் குட்கா பொருட்களை விற்கும் பெட்டிக்கடைக்காரர்களிடம் டுபாக்கூர் நிருபர்கள் மாதந்தோறும் மாமூல் வேட்டை நடத்துகின்றனர். கொடுக்கவில்லை என்றால், உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் சிக்க வைத்து விடுவர் என்று பயந்து, டுபாக்கூர்களின் பட்டியல் போட்டு, செட்டில் செய்கின்றனர். அதிகாரிகள் ரெய்டு நடத்தி சிக்கும் பெட்டிக்கடைகள் பிடிபடும்போது, தகவல் உடனடியாக இந்த டுபாக்கூர்களுக்கு பறக்கிறது,''''உடனே அதிகாரிகளை போனில் கூப்பிட்டு, ''சார்... சார்.. அது எங்க மாமன், மச்சான், சித்தப்பா, தம்பின்னு சொல்லி, நடவடிக்கை எடுக்காதீங்கன்னு சொல்லி, மிரட்டுறாங்களாம். எந்தெந்த பெட்டிக்கடைகள்ல யார் யார் எவ்வளவு வசூல் செய்கின்றனர் என்கிற பட்டியல், அதிகாரிகள் வசம் இருக்குதாம். அதனால, குட்கா விற்கும் கடைகளுக்கு 'சீல்' வச்சுடறாங்க,''''இப்படி ஒரு நாள், முருகம்பாளையத்தில், 16 வயது சிறுவன் குட்கா விற்ற போது, அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளான். துரத்திப்பிடித்த அதிகாரிகள்,குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, போலீசிலும் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்த டுபாக்கூர்ஸ், சிறுவனை, அதிகாரிகள் தாக்கி விட்டதாக புரளி பரப்பி, ஜி.எச்.,சிலும் அட்மிஷன் செய்து நாடகமாடினர்,''''குட்கா ஆரம்பிச்சு இவர்களின் சேட்டை, 'டாஸ்மாக்', பத்திரப்பதிவு ஆபீஸ்ன்னு பல இடங்களிலும் பரவிடுச்சாம். பத்திரிகை உலகில் பரவியுள்ள இந்த டுபாக்கூர்ஸ்களை களை எடுத்தால் மட்டுமே திருப்பூர் நல்லாருக்கும்னு, அதிகாரிகள் சொல்கின்றனர்,'' சித்ரா விளக்கினாள்.''உண்மைதாங்க்கா... டுபாக்கூர்ஸ் பண்ற வேலைக்கு சிலர் 'ஜால்ரா' போடறது உச்சகட்டகொடுமைங்க்கா. அக்கா, தெற்கு ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு வரும் பொதுமக்கள் தங்களோட வண்டிகளை வெளியே நிறுத்துங்கன்னு ஆபீசர் உத்தரவு போட்டுள்ளார். ஆனால், டிரைவிங் ஸ்கூல் வைத்துள்ளவர்கள், புரோக்கர்கள் கார்களில் வந்தால், வரவேற்று வாகனங்கள் நிறுத்த ஆபீசர் கார் நிற்குமிடத்திலேயே இடம் ஒதுக்கி தருகின்றனர். எல்லாம் 'கவனிப்பால்' வந்த காலம்னு விஷயம் தெரிந்தவர்கள் புலம்புகின்றனர்,'' என்றாள் மித்ரா.அதற்குள் கோவில் வாசலை எட்டிப்பார்த்த சித்ரா, ''மித்ரா... வா உள்ளே போலாம்,''என்று எழுந்தாள்.