உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜனநாயக கடமையாற்ற சிக்கல்! l வந்து சேராத வாக்காளர் அட்டை; பட்டியல் குளறுபடி

ஜனநாயக கடமையாற்ற சிக்கல்! l வந்து சேராத வாக்காளர் அட்டை; பட்டியல் குளறுபடி

திருப்பூர்;வாக்காளர் பட்டியல் குளறுபடி, வந்துசேராத வாக்காளர் அட்டை என, தேர்தல் பிரிவினர் மற்றும் தபால் துறையினரின் அலட்சியத்தால், திருப்பூர் மாவட்டத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கான வாய்ப்பு பறிபோகிறது.இரட்டை வாக்காளர், போலி வாக்காளர், இறந்த வாக்காளரை கண்டறிந்து, பட்டியலில் இருந்து நீக்குவதில் நீடிக்கும் சிக்கல்கள்; தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு, முதுமை, தவிர்க்கமுடியாத பயணங்கள் உள்ளிட்டவை , ஓட்டுப்பதிவு குறைய பொதுவான காரணமாக உள்ளன.இதுமட்டுமின்றி, வாக்காளர் பட்டியல் குளறுபடிகள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் (பி.எல்.ஓ.,)க்களின் அஜாக்கிரதை, வாக்காளர் அடையாள அட்டை கையில் கிடைக்காததும், ஓட்டுப்பதிவு பாதிப்புக்கு முக்கியமான காரணிகளாகின்றன.கடந்த 2023 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டத்தில், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றங்களுக்காக ஏராளமான வாக்காளர் விண்ணப்பித்தனர். சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்த பலரும், தங்களுக்கு இன்னும் வாக்காளர் அட்டை வந்து சேரவில்லை என புலம்புகின்றனர்.முகாமில் வழங்கிய ஒப்புகைச்சீட்டைப்பார்க்கும்போதுதான், பதிவு எண் கூட இல்லாதது தெரியவருகிறது. ஆதார் எண், மொபைல் எண் பயன்படுத்தி தேர்தல் கமிஷன் தளத்தில் தேடினாலும், விவரங்களை கண்டறியமுடியவில்லை. தனது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டதா, இல்லையா என தெரியாமல், திருப்பூர் - தாராபுரம் ரோடு, சேரன் நகரைச்சேர்ந்த செல்வம் போன்று பலர் உள்ளனர்.முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்த ஒரே குடும்பத்தைச் சேர்தோரின் பெயர், வெவ்வேறு பாகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விண்ணப்பங்கள்மீது, பி.எல்.ஓ.,க்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.ஆயிரத்து 500க்கும் மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்கப்படுகிறது. இவ்வாறு பிரிக்கும்போது, வாக்காளர்களிடம் எந்த விவரமும் கேட்டதுமில்லை; தெரிவிப்பதுமில்லை. ஒரே குடும்பத்தைச்சேர்ந்த உறுப்பினர்களுக்கு தொலை துாரங்களில் உள்ள வெவ்வேறு ஓட்டுச்சாவடிகளில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவை அதிகரிக்கும்வகையில், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர் வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.ஆனாலும், திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பிரிவினர், தபால் துறையினரின் இதுபோன்ற அலட்சியத்தால், இந்த தேர்தலிலும் நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.தேர்தல் பிரிவுக்கு திரும்பிய3 ஆயிரம் வாக்காளர் அட்டைவீரபாண்டியைச் சேர்ந்த சோலைமலை என்பவர், மனைவி, மகன் மற்றும் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்திருந்தார். வாக்காளர் அடையாள அட்டை வந்துசேராதநிலையில், மாவட்ட தேர்தல் பிரிவு கன்ட்ரோல் ரூமை அணுகினார். 'தபாலில் அனுப்பிய வாக்காளர் அட்டை, பிப்ரவரி மாதத்திலேயே உங்கள் கைகளில் வழங்கப்பட்டுவிட்டது' என தெரிவித்தனர். காட்டன் மார்க்கெட் தபால் அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, ஒரு மூலையில் கிடந்த வாக்காளர் அட்டைகளை எடுத்துக்கொடுத்தனர். ஆனாலும், மகனுக்கான அடையாள அட்டையை கண்டுபிடிக்கமுடியவில்லை.தபாலில் அனுப்பிய 3,000 வாக்காளர் அடையாள அட்டைகள், முகவரி கண்டறியமுடியாமல், தேர்தல் பிரிவுக்கு திரும்பியிருந்தது. அவை, பி.எல்.ஓ.,க்கள் மூலம், வீடு வீடாகச் சென்று வழங்குவதாக தெரிவிக்கிறது தேர்தல் பிரிவு. பி.எல்.ஓ.,க்களோ, தங்களை தொடர்புகொண்டு கேட்போருக்கு மட்டுமே, அட்டை உள்ளது; வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என பதிலளிக்கின்றனர்; வீடு தேடிவந்து கொடுப்பதில்லை என, வாக்காளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை