நொய்யல் நதிக்கரையினிலே... பசுஞ்சோலையாக மாற்றும் திட்டம் துவங்கியது
திருப்பூர் : திருப்பூர் மாநகரட்சி நிர்வாகம், 'வெற்றி' அறக்கட்டளை சார்பில், நொய்யல் கரையோரம், 500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும், 'நொய்யல் நதிக்கரையினிலே!' திட்டம் நேற்று துவங்கியது.'வெற்றி' அறக்கட்டளை சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2015ல் துவங்கி, இதுவரை, 19.20 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இத்திட்டத்தில், அரியவகை மரங்களை பாதுகாக்கும் மூலிகை பூங்கா, மூங்கில் பூங்கா, மாநகாட்சி அறிவியல்பூங்கா போன்ற பல்வேறு பசுமை சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி பகுதியில், நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு, இருகரைகளிலும், புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், புதிய வழித்தடம் அமைத்து, தார்ரோடு அமைக்கப்படுகிறது. நொய்யல் ரோட்டின் இருபுறமும், நிழல்தரும் மரங்களை நட்டு வளர்க்க, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு முன்வந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம், வெற்றி அமைப்பு சார்பில், 'நொய்யல் நதிக்கரையினிலே...' என்ற திட்டம் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.திருப்பூர் வளம் பாலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், நொய்யல் கரையோரமாக, 500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வ ராஜ், துவக்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் உள்ளிட்டோர், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.