வானமே மேற்கூரை தரையிலோ வெள்ளம்
அனுப்பர்பாளையம்; வானமே கூரையாக கொண்டு செயல்படும் பெருமாநல்லுார் வாரச்சந்தையில், தரைத்தளத்திலோ மழைநீர் தேங்குகிறது. அடிப்படை வசதிகள் இன்றி வியாபாரிகள் தவிக்கின்றனர்.பெருமாநல்லுார் ஊராட்சி, நால்ரோடு சந்திப்பு அருகே வாரச்சந்தை செயல்படுகிறது.சனிக்கிழமை தோறும் செயல்படும் வார சந்தைக்கு திருப்பூர், அவிநாசி, சேவூர், நம்பியூர், குன்னத்துார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், துணிகள், அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதியில்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர். வெயிலிலும் சிரமம்மழையிலும் கஷ்டம்
அவர்கள் கூறியதாவது: வாரச்சந்தையில் மேற்கூரை வசதி இல்லை. வெயில் நேரத்தில் துணியை கூரையாக அமைத்து கொள்கிறோம்.மழை நேரங்களில் வியாபாரம் செய்யமுடியாது. அதே நேரம் தரைத்தளம் அமைக்கப்படவில்லை. மழைநீர் தரையில் தேங்கி நிற்கும். பொருட்கள் வைக்க முடியாத நிலையால் விற்பனை பாதிக்கப்படும். அடிப்படை வசதிகள்மறுக்கிறது ஊராட்சி
போதிய மின் விளக்கு வசதி இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளது. வெளிச்சத்திற்கு நாங்கள் கொண்டு வரும் பேட்டரி மின் விளக்கை பயன்படுத்தி வருகிறோம்.கழிப்பறையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு ரூபாய் வாங்க வேண்டும். ஆனால் ஐந்து ரூபாய் வசூல் செய்கின்றனர்.குத்தகை கட்டணம் 50 ரூபாய் முதல் கடையை பொறுத்து 300 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.அதிக வருவாய் உள்ள வாரச்சந்தை, ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தர மறுத்து வருகிறது.பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர முன் வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.