திருப்பூர்:ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி பயில உள்ள மாணவ, மாணவியருக்கு வழங்க, 2.51 லட்சம் நோட்டுகள், 79 ஆயிரம் புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.2024 - 2025ம் கல்வியாண்டு ஜூன் 6ம் தேதி துவங்க உள்ளது. பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கைகளில் புத்தகங்கள் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி, மே மூன்றாவது வாரம் துவங்கியது.பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு மூன்று தவணைகளில் 2.51 லட்சம் நோட்டுகள், 79 ஆயிரம் புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான புத்தகங்கள், வாசவி வித்யாலயா பள்ளியிலும், நோட்டுகள், 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஒன்பது, பத்தாம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளி புத்தகங்கள், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகங்களை பாதுகாக்க ஒவ்வொரு பள்ளிக்கு தனிஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம் கூறுகையில், ''மாணவ, மாணவியருக்கு தேவையான, 90 சதவீத புத்தகங்கள் சென்னையில் இருந்து வந்து விட்டன. திருப்பூரில் உள்ள ஏழு வட்டாரங்களுக்கு, பள்ளிகள் வாரியாக பிரித்து அடுக்கும் பணி நடந்து வருகிறது. இன்று முதல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வசம், புத்தகம், நோட்டுக்கள் ஒப்படைக்கப்படும். இவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் அவர்கள், ஜூன் 6ம் தேதி பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு வினியோகிப்பர்.மாணவர் அட்மிஷன் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஜூன் முதல் வாரம் வரை தொடர்ந்து புத்தகங்கள் தருவிக்கப்படும்,' என்றார்.