| ADDED : மார் 29, 2024 11:47 PM
திருப்பூர்:மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் தள்ளு வண்டி கடை நடத்திய நபர், தனது கடையை தானே போட்டு உடைத்து, தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர், பல்லடம் ரோட்டைச் சேர்ந்தவர் கணபதி, 32. தஞ்சாவூரை சேர்ந்த இவர், 7 ஆண்டாக திருப்பூரில் தள்ளு வண்டி கடை நடத்தி வருகிறார். தற்போது மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தள்ளு வண்டியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அவரது தள்ளு வண்டி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில், சற்று தள்ளி நிறுத்துமாறு மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், ஆவேச மடைந்த கணபதி திடீரென தனது தள்ளு வண்டியை பஸ் ஸ்டாண்ட் முன் நடுரோட்டில் கொண்டு சென்று தள்ளி விட்டார். அதிலிருந்த பொருட்களை ரோட்டில் போட்டு உடைத்தார். இதனை பார்த்து வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒதுங்கிச் சென்றனர்.தகவல் அறிந்து பஸ் ஸ்டாண்ட் அவுட் போஸ்ட் போலீசார் விரைந்து சென்று அவரை சமாதானம் செய்து அப்புறப் படுத்த முயன்றனர்.ஆனால், போலீசார் தடுத்தும், தன் கையிலிருந்த சிறிய கத்தியால், கழுத்தை அறுப்பது போல் தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை அங்கிருந்து அகற்றி அழைத்துச் சென்று, போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கின்றனர்.