அச்சுறுத்தும் பிளக்ஸ் பேனர்! அதிகாரிகள் அலட்சியம்
உடுமலை; நகரின் முக்கிய ரோடுகளில், விதிமுறைகளை மீறி ஆக்கிரமித்து வரும் 'பிளக்ஸ்' பேனர்களால், விபத்துகள் அதிகரித்தும் நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.உடுமலை நகரின் முக்கிய ரோடுகளில், மீண்டும் தாறுமாறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்க துவங்கியுள்ளனர். விபத்துகளை தவிர்க்க, பிளக்ஸ் பேனர்கள் வைக்க நீதிமன்றங்கள் பல்வேறு வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் தெரிவித்துள்ளன.அதில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், உடுமலையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்கதையாகியுள்ளது.தற்போது, உடுமலை பஸ் ஸ்டாண்ட், காந்திநகர், அண்ணா குடியிருப்பு, ராமசாமி நகர் ரயில்வே கேட் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்தும், பேனர் மயமாக காட்சியளிக்கின்றன.காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரையே தெரியாத அளவுக்கும், உழவர் சந்தையிலிருந்து ராமசாமி நகர் செல்லும் முக்கிய ரோட்டில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கும், பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.இதனால், நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டும், நகராட்சி நிர்வாகத்தினரும், போக்குவரத்து போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.விரைவில், உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்க உள்ள நிலையில், பிற முக்கிய வீதிகள் அனைத்தும், பிளக்ஸ் பேனர்கள் வைக்க வாய்ப்புள்ளது.ஆண்டுதோறும் பக்தர்களும், மக்களும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தும், பிளக்ஸ் பேனர் வைப்பதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.பல வாரங்களுக்கு அகற்றப்படாத பிளக்ஸ் பேனர்கள், காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்காமல் கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.அதிகாரிகள் அலட்சியத்தை கைவிட்டு, விதிமீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். போக்குவரத்து அதிகமுள்ள ரோடுகளில், பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்.