உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போராட்டக்காரருக்கு உபசரிப்பு; போலீஸ் லஞ்ச நச்சரிப்பு

போராட்டக்காரருக்கு உபசரிப்பு; போலீஸ் லஞ்ச நச்சரிப்பு

சாலா டீயை ருசித்துக்கொண்டே பேசினாள் சித்ரா.''மித்து... மாநகராட்சி ஏழு, எட்டாவது வார்டு பகுதிக்கு அடிப்படை வசதி கோரி, ரெண்டாவது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சிக்காரங்க, பொதுமக்களோட சேர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துனாங்கள்ல...''அவங்களுக்கு மண்ட லத் தலைவர் கோவிந்தராஜ் டீ கொடுத்து உபசரிச்சாராம். கோரிக்கைகளுக்கு உடனடியா தீர்வு காணுங்கன்னு அதிகாரிங்களை அழைச்சு சொன்னாராம்.''மார்க்சிஸ்ட்காரங்க மனசு குளிர்ந்திருச்சாம். 'நாம எத்தனை தடவை ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்போம். இப்படி உபசரிப்பு நடந்திருக்குமா... கூட்டணிக்கட்சிக்காரங்க மேல என்ன ஒரு பாசம்'ன்னு தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டலத் தலைவரை எதிர்க்கட்சிக்காரங்க கிண்டலடிக்கிறாங்களாம்''சித்ரா சிரித்தாள்.

'பேராசை' பெருநஷ்டம்

''சித்ராக்கா... ஒப்பந்ததாரர்ட்ட 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குன மாநகராட்சி இளம் பொறியாளரை, இப்பக் கைது பண்ணுனாங்கள்ல... 'பில்' பாஸ் பண்ணவே பத்து பெர்சன்ட் கேட்டா எங்க போறது... அதுதான் சிக்கவைக்க வேண்டியதா போச்சுன்னு ஒப்பந்ததாரர் தரப்புல சொல்றாராம்.''மாட்டிக்கிட்ட இளம்பொறியாளருக்குச் சின்ன வயசுதான். பேராசை பெருநஷ்டம். சில மாசத்துக்கு முன்னாடி இதேபோல், இன்னொரு இளம்பொறியாளரும் சிக்கினாரு... மாநகராட்சில ஊழல் அதிகாரிங்க கலங்கித்தான் போயிருக்காங்க''மித்ரா ஆசுவாசப்பட்டாள்.

மினி பஸ்கள் 'சிண்டிகேட்'

''மித்து... திருப்பூர் குமரன் கல்லுாரி துவங்கற, முடியற நேரங்கள்ல, இந்தப்பகுதிக்கு அரசு டவுன் பஸ்சுங்கள தாமதமா இயக்குறதா சொல்றாங்க...''இதனால வெவ்வேறு ரூட்ல இயங்குற மினி பஸ் கள் எல்லாம், சிண்டிகேட் போட்டு, காலை மற்றும் மாலை ஒரே நேரத்தில கல்லுாரி பக்கத்தில நிறுத்திடறாங்களாம். மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு 20 ரூபாய் வரைக்கும் வசூலிக்கிறாங்களாம்.''அரசு டவுன் பஸ்சுங்க இந்த நேரத்தில வந்தா இலவசமா மாணவிகள்பயணம் செய்ய முடியும். போக்குவரத்து அதிகாரிங்களுக்கு இதெல்லாம் தெரியாமயா இருக்கும்...''கலெக்டரே தலையிட்டாதான் நல்லது''சித்ராவிடம் ஆதங்கம்.

ஊராட்சி தலைவர்கள் 'வசூல்'

''சித்ராக்கா... ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடியப்போகுது.''இருக்கிற மூனு மாசத்தில எப்படியும் ஒரு தொகையைச் சம்பாதிச்சிடணும்னு, சில ஊராட்சித்தலைவருங்க மும்முரமா இருக்காங்களாம்.''கட்டட வரைபடம், அனுமதி, மனை அங்கீகாரம், அடிப்படை வசதி, 100 நாள் வேலை திட்டம்னு எதுவா இருந்தாலும் கறாரா வசூல் பண்றாங்களாம்.''உள்ளாட்சித்தேர்தல் உடனடியா நடக்காதுன்னு தெரிஞ்சு கிடைச்சவரை லாபம்னு களத்தில இறங்கியிருக்காங்க...''எப்படியும் தேர்தல் நடக்கும்போது கையெடுத்து கும்பிட்டு வீடுதேடி வருவீங்கள்ல... அப்ப வச்சிக்கிறோம்ன்னு மக்கள் கங்கணம் கட்டியிருக்காங்களாம்''மித்து நகைத்தாள்.

யோசனையை ஏற்பாரா?

''மித்து... சிட்டில லோக்கல் போலீசோட சேர்ந்து ஏ.ஆர்., போலீசும்வாகனத்தணிக்கை, போக்குவரத்து ஒழுங்குபடுத்துற பணியில ஈடுபடுத்தப்படறாங்க...''விதிமீறல்ல ஈடுபடுறவங்கள ஏ.ஆர்., போலீஸ்காரங்க பிடிச்சுக்கொடுத்ததும், அங்கிருந்து போயிடறாங்க. பத்து பேரைப் பிடிச்சுக்கொடுத்தா கணக்கு காட்டுறதோ ஒன்னு, ரெண்டு பேரைத்தான்.''எத்தனை பேரைப் பிடிச்சுக்கொடுத்தோம்னு ஏ.ஆர்., போலீஸ்காரங்க தனியா கணக்கு கொடுத்து பெரிய அதிகாரியோட பார்வைக்குப் போச்சுன்னா, இடையில தகிடுதத்தம் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க...''''ஆமாக்கா... நல்ல யோசனை தான்''''மித்து... சிட்டிக்குள்ள மது விற்பனை குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி நடக்கக்கூடாதுன்னு அதிகாரி கண்டிப்பா சொல்லீட்டதால, மாமூல் வாங்கீட்டு இருந்த போலீசெல்லாம், பேயறைஞ்ச மாதிரி சுத்தறாங்களாம்.''பார்காரங்க ஆளும்கட்சிக்காரங்ககிட்டயும், லோக்கல் வி.ஐ.பி.,ட்டயும் விஷயத்தைச் சொல்லிப் புலம்புறாங்க...''ஆனா, அதிகாரிட்ட சொன்னா நிச்சயம் கண்டுக்க மாட்டாங்க... ரூல்ஸதானே பாலோ பண்றோம்னு திருப்பிக்கேட்ருவாரு... தேவையில்லாம நமக்கு எதுக்குப் பிரச்னைன்னு ஆளும்கட்சித் தரப்பினரும் யோசிக்கிறாங்களாம். இதனால எந்த ரூட்ல போறதுன்னு சிந்திச்சிட்டு இருக்காங்களாம்''சித்ரா தெளிவாகச் சொன்னாள்.

கொத்தாக துாக்கிய போலீஸ்

''சித்ராக்கா... கணவரைக் கடத்திட்டுப்போய், மனைவியிடம் ஒரு லட்சம் கேட்ட மூனு போலீஸ்காரங்கள சிட்டில கைது பண்ணுனாங்கள்ல... மூனு பேரு மேலயும், அடுக்கடுக்கான புகார்கள் இருக்காம். ஆனா தப்பிச்சுட்டே வந் தாங்க... இப்ப வசமா சிக்கிட்டாங்க.''திருப்பூர்ல இருந்து கடத்தல் சம்பவத்தைச் செய்றதுக்கு முன்னாடி, ஈரோட்டில் இருந்து ரெண்டு பாலியல் புரோக்கர்களைக் கடத்தி அறையில் அடைச்சு வச்சு 'டீல்' பேசியிருக்காங்க. அவங்களும் பயந்துபோய் ரெண்டு லட்சத்தை ரெடி பண்ணீட்டாங்க... அந்தப்பணம் கிடைக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்னாடி, சிட்டி போலீஸ் இவங்களைக் கொத்தா துாக்கிட்டாங்க''''மித்து... அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் 'செக்போஸ்ட்'ல 'சிற்ப' ஏரியாவை சேர்ந்த குட்டி அதிகாரி பணியில் இருந்தப்ப டூவீலர்ல வந்த கல்லுாரி மாணவரை சோதனை செஞ்சிருக்காரு... ஹெல்மெட், லைசென்ஸ் இல்லாததற்கு அபராதம் கட்டச் சொன்னாராம். மாணவரோட பெற்றோர் அங்கு வந்தாங்க... அபராதம் கட்டணும்...''இல்லேன்னா ரோந்து போலீஸ் வாகனத்துக்கு, 15 லிட்டர் டீசல் அடிக்கணும்னு சொன்னாங்களாம். பணம் இல்லைன்னு சொல்லியும் விடலையாம். பேரம் பேசி, 700 ரூபாய் வாங்கீட்டுத்தான் அனுப்பியிருக்கார். இது உயரதிகாரி காதுக்குப் போனதும், பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துட்டாராம் 'குட்டி' அதிகாரி''சம்பவத்தை விவரித்தாள் சித்ரா.''சித்ராக்கா... பல்லடம் அனுப்பட்டில கூட்டுறவு சொசைட்டி புதுக்கட்டடம் திறந்தாங்கள்ல... ஆளும்கட்சிக்காரங்கதான் இருந்தாங்களாம். கூட்டுறவுத்துறை அதிகாரிங்களைக் காணோமாம்.''கேட்டதுக்கு, 'எங்களுக்கே தகவல் தெரியல... நீங்க சொல்லித்தான் தெரியுது'ன்னு கூட்டுறவுத்துறை அதிகாரிங்க சொன்னாங்களாம். என்னதான் நடக்குதோ''மித்ரா அங்கலாய்த்தாள்.மித்து... குளம், குட்டைல மொத்தமாமண் எல்லாத்தையும் சுரண்டறாங்களாம். கண்காணிக்க டூட்டி போட்ட அதிகாரிங்க யாருமே ஸ்பாட்ல இல்லையாம்''''கமிஷன் கரெக்டா போயிடுறதால, 'நான் அவன் இல்லை'ங்கிற கதையா அதிகாரிங்க யாரைக் கேட்டாலும் தப்பிக்கத்தான் பாக்கறாங்க.''அதிகாரிங்க காட்டுல அடைமழைதான்''''ஆமா சித்ராக்கா... விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளின்னு அதிகாரிங்க அடுத்து ரொம்பவே பிஸியா இருக்காங்களாம். அதுல இப்ப 'தீ'யா ஒருதுறையைச் சேர்ந்த அதிகாரிங்க வேலை செய்றாங்களாம். பார்ட்டிக்குத் தகுந்த மாதிரி ரேட் பிக்ஸ் பண்ணித்தான் என்.ஓ.சி.,யே கொடுக்கப்போறாங்களாம்''''மித்து... தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொல்லு''இருவரும் கலகலத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ