குடிநீர் சுத்திகரிப்பு மையம்; காட்சிப்பொருளான அவலம்
திருப்பூர்; ஊராட்சிகளில், காட்சிப்பொருளாக மாறியுள்ள, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும், சுத்திகரிப்பு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், மக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கும், பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆர்.ஓ., மையங்கள் அமைக்கப்பட்டன.நகரப்பகுதியை ஒட்டியுள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளில், தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. பிரதான குடிநீர் குழாயுடன் இணைத்து, ஆர்.ஓ., குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.மையத்தில், தானியங்கி முறையில், ஐந்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், 16 லிட்டர் குடிநீர் கிடைத்து வந்தது. கிராமப்புறங்களில், சுவையில்லாத தண்ணீராக இருந்தாலும், ஆர்.ஓ., முறையில் சுத்திகரித்து வழங்கிய போது, குடிக்க சுவையாக இருந்தது.தனியார் நிறுவனங்கள், 30 ரூபாய்க்கு வழங்கும் குடிநீர், ஐந்து ரூபாய்க்கு கிடைத்ததால், பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பெரும்பாலான சுத்திகரிப்பு மையங்கள் தற்போது பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன; மக்கள் வரிப்பணமும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் சில நாட்களில், குளிர் பருவம் முடிந்து, கோடைக்காலம் துவங்கியுள்ளது.முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது; கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குறிப்பாக, ஆர்.ஓ., மையம் அமைத்துள்ள ஊராட்சிகளில், அனைத்து மையங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டும். அடிக்கடி ஆர்.ஓ., மையத்தை பராமரித்து, பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.