திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கணும்! பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை; பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து நீர் பெறப்பட்டு, திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, ஜன., 29ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டலத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.அணையில் இருந்து தண்ணீர் திறந்ததும், ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் மற்றும் தானிய வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்தனர். பிப்., 24ல், முதல் சுற்று நிறைவு பெற்றது.இதையடுத்து, திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, சர்க்கார்பதி நீர் மின்உற்பத்தி நிலையம் வழியாக, காண்டூர் கால்வாயில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறும் பணிகள் துவங்கியது.அப்போது, சர்க்கார்பதி நீர் மின்உற்பத்தி நிலையத்தில், இயந்திரம் பழுது காரணமாக, தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் எடுப்பது தடைபட்டது.இப்பிரச்னையால், திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு தாமதமானது; வளர்ச்சி தருணத்தில், நிலைப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. கடந்த, 6ம் தேதி சர்க்கார்பதி நீர் மின்உற்பத்தி நிலையத்தில், பழுது சரிசெய்யப்பட்டு, காண்டூர் கால்வாய் வாயிலாக, திருமூர்த்தி அணைக்கு நீர் பெறப்படுகிறது.நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையின் 60 அடி உயரத்தில், 44.57 அடி நீர்மட்டமும், அணைக்கு வினாடிக்கு 616 கனஅடி நீர் வரத்தும் இருந்தது. நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், காய்ந்து வரும் நிலைப்பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனால், நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில், தண்ணீர் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் நேற்று வரை வெளியாகவில்லை.விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் போது, முறையான அறிவிப்பு இல்லாமல், வட்டமலை கரை அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டது. இத்தகைய புதிய நடைமுறைகளால், மூன்றாம் மண்டல பாசனத்தில், ஆயக்கட்டு விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.