வீட்டு வரி பாதியாக குறையுமா?
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டு, வாவிபாளையம் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டுவந்து மனு அளித்தனர்.அம்மக்கள் கூறியதாவது:திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில், 1248 வீடுகள் உள்ளன. ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும், நொய்யல் கரையில் வசித்துவந்த மக்களுக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டு வசித்துவருகிறோம். எங்கள் வீடுகளுக்கு வரி விதிப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.குடியிருப்பு பராமரிப்பு தொகை என்கிற பெயரில் 250 ரூபாய் வசூலிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஜனவரி மாதம், அனைத்து வீடுகளுக்கும், வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3,073 ரூபாய் வீதம் வரி விதிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கான நிலுவை வரியை செலுத்தக்கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளான எங்களால் அவ்வளவு தொகையை செலுத்த இயலாது. முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவை வரியை தள்ளுபடி செய்து, நடப்பு ஆண்டிலிருந்து வரி விதிக்கவேண்டும். ஏற்கனவே பராமரிப்பு தொகை வசூலிக்கப்பட்டுவருகிறது; மாநகராட்சி சார்பில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, 3,073 ரூபாய் வீட்டு வரியை, பாதியாக குறைக்கவேண்டும்.