கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 மாஜி குற்றவாளிகள் கைது
பல்லடம்; பல்லடத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த, மாஜி குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே கணபதிபாளையம் சிந்து கார்டன் பகுதியில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்த, கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜா முகமது மகன் யூசுப் முகமது ஆஜி, 33. இவரது சகோதரர் சையது அலி 19 மற்றும் மகாலட்சுமி நகரை சேர்ந்த களஞ்சியம் மகன் கவுதம் ராஜா, 24 ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மறைத்து வைத்திருந்த, 22 டர்பன்டால் மாத்திரைகள், 30 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் போதைக்காக பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். யூசுப் முகமது ஆஜி மீது, பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு உட்பட, 6 வழக்குகளும், சையது அலி மீது ஒரு திருட்டு வழக்கும், கவுதம் ராஜா மீது, வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில், போதை பொருள் பயன்படுத்திய வழக்கும் உள்ளது. மூவரையும் கைது செய்த போலீசார், பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.